போலீசாரை கண்டித்து பெரம்பலூரில் வக்கீல்கள் உண்ணாவிரதம்

போலீசாரை கண்டித்து பெரம்பலூரில் வக்கீல்கள் உண்ணா விரதம் இருந்தனர்.;

Update: 2018-06-27 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் வக்கீல் சங்க உறுப்பினர் மோகன் என்பவர், மனுதாரருடன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றார். அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மோனிகா ஆகியோர் தகாத வார்த்தையால் திட்டி, போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே செல்லுமாறு கூறினார்களாம்.

இதனை கண்டித்தும், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் சங்கத்தை சேர்ந்த வக்கீல்கள் கடந்த 18-ந்தேதி முதல் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் போலீசாரை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக வக்கீல்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி, சங்கத்தை சேர்ந்த வக்கீல்கள் நேற்று காலை கோர்ட்டு பணியை புறக்கணித்து விட்டு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் வளாகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு, சங்கத்தின் தலைவர் வள்ளுவன் நம்பி தலைமை தாங்கினார். மேலும் செயலாளர் சுந்தர்ராஜன், துணைத் தலைவர் ராதாகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உண்ணாவிரதத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஞானசேகரன் தொடங்கி வைத்தார். உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட வக்கீல்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். இனிமேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் தொடர்ந்து கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். காலையில் தொடங்கிய உண்ணாவிரதம் மாலை வரை நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். 

மேலும் செய்திகள்