திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட்டில் இருந்து மாத்தூர் வரை 10 கி.மீ.நீள சாலையை ரூ.13 கோடியில் மேம்படுத்தும் பணி

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் இருந்து மாத்தூர் வரை உள்ள 10 கி.மீ நீள சாலையை ரூ.13 கோடியில் மேம் படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விமான நிலையம் வரை தடுப்புச்சுவரும் உயர்த்தப் படுகிறது.

Update: 2018-06-27 23:00 GMT
திருச்சி,

திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் டி.வி.எஸ். டோல்கேட்டில் இருந்து மாத்தூர் வரை உள்ள 10 கி.மீ நீள சாலை குண்டும் குழியுமாக வலுவிழந்த நிலையில் இருந்ததால் அதனை மேம்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. 13 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் இந்த பணி நடந்து வருகிறது. தற்போது உள்ள சாலையை நவீன பேவர் எந்திரங்கள் மூலம் பலப்படுத்தி மேம்படுத்துவது தான் இதன் முக்கிய நோக்கமாகும்.

மாத்தூரில் இருந்து தான் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (என்.எச்.ஏ.ஐ) நான்குவழிச்சாலையானது தொடங்கி புதுக்கோட்டை வழியாக காரைக்குடி வரை செல்கிறது. திருச்சியில் இருந்து தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, கரூர் செல்லும் 4 தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் அரை வட்ட சுற்றுச்சாலை பணியானது பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் மாத்தூரில் இருந்து டி.வி.எஸ். டோல்கேட் வரை உள்ள சாலை தரம் உயர்த்தப்பட்டு வருகிறது.

“இந்த சாலையை பொறுத்தவரை டி.வி.எஸ். டோல்கேட்டில் இருந்து விமான நிலையம் வரை (4 கி.மீ) 15 மீட்டர் அகலத்திலும், விமான நிலையத்தில் இருந்து மாத்தூர் வரையிலான 6 கி.மீ நீளத்திற்கு 10 மீட்டர் அகலத்திலும் இருக்கும். விமான நிலையம் வரை சாலை நடுவில் தற்போது உள்ள தடுப்புச் சுவர் (சென்டர்மீடியன்) ஒரு மீட்டர் உயரத்திற்கு உயர்த்தப்பட்டு வாகன ஓட்டுனர்களின் பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்தப் படும்” என்று தேசிய நெடுஞ்சாலை துறையின் உதவி கோட்ட பொறியாளர் ராஜூ கூறினார்.

டி.வி.எஸ். டோல்கேட்டில் இருந்து விமான நிலையம் வரை உள்ள சாலையில் அடிக்கடி ஏற்படும் போக்கு வரத்து நெருக்கடியால் விபத்துக்கள் நடப்பதால் தரம் உயர்த்தும் பணியின் ஒரு பகுதியாக அதனை அகலப்படுத்தவும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நட வடிக்கை எடுக்கவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும். 

மேலும் செய்திகள்