நீதிமன்ற கட்டிட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி வக்கீல்கள் 2-வது நாளாக கோர்ட்டு புறக்கணிப்பு

சீர்காழியில், ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி வக்கீல்கள் 2-வது நாளாக கோர்ட்டு புறக்கணிப்பு செய்தனர். மேலும், உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

Update: 2018-06-27 22:45 GMT
சீர்காழி,

நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள புதிய பஸ் நிலையம் எதிரே ரூ.5 கோடியே 50 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கட்டப்பட்டு ஓராண்டு ஆகிறது. ஆனால், இந்த கட்டிடத்தில் சில பணிகள் மட்டும் முழுமை பெறாமல் உள்ளது. இதனால் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்படாமல் உள்ளது.

இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தின் நுழைவுவாயில் மற்றும் சுற்றுச்சுவர் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்து ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்து புதிதாக கட்டப்பட்ட நீதிமன்ற கட்டிடத்தின் நுழைவுவாயிலின் முன்பு முள்வேலியை வைத்து அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று 2-வது நாளாக வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் மணிவண்ணன், மூத்த வக்கீல்கள் பன்னீர்செல்வம், சுந்தரய்யா, கனிவண்ணன், சத்தியமூர்த்தி, வீரமணி, தியாகராஜன், கார்த்தி, ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தின்போது புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தில் நுழைவுவாயில், சுற்றுச்சுவர் போன்ற விடுபட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். புதிதாக கட்டப்பட்ட நீதிமன்ற கட்டிடத்தில் விடுபட்ட பணிகளை விரைந்து முடிக்காமல் காலம் தாழ்த்தி வரும் பொதுப்பணி துறையின் கட்டிட பிரிவை சேர்ந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் வக்கீல்கள் சந்திரமோகன், கார்த்தி, தியாக ராஜன், ராஜேஷ், ஜூலி, சாந்தி, கார்த்திகேயன், பாலசுப்பிர மணியன், நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்