கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த மனைவிக்கு சரமாரி அரிவாள் வெட்டு கணவரிடம் போலீசார் விசாரணை

ராயக்கோட்டை அருகே கள்ளத் தொடர்பை கைவிட மறுத்தமனைவியை, விவசாயி அரிவாளால் சரமாரியாக வெட்டினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-06-27 22:15 GMT
ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள தொட்டதிம்மனஅள்ளி ஊராட்சி மொள்ளம்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 50), விவசாயி. இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (45). இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இதில் மகள்களுக்கு திருமணமாகி விட்டது.

இதனிடையே கிருஷ்ணவேணிக்கும், அதேபகுதியை சேர்ந்த முனிராஜ் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த வெங்கடேஷ் மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

சரமாரி வெட்டு

இந்த நிலையில் சம்பவத்தன்றும் அவர்களுக்குள் இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், மனைவி கிருஷ்ணவேணியை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வெங்கடேசை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்