பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து ஒரே நாளில் ரூ.2½ கோடி மின்கட்டண பாக்கி வசூல்
கட்டண பாக்கி வைத்துள்ளவர்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து நேற்று ஒரே நாளில் ரூ.2½ கோடி வசூலானது. மின்துறை தலைமை அலுவலகத்தில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு நடத்தினார்.
புதுச்சேரி,
புதுவையில் உள்ள தொழில் நிறுவனங்கள், வீடுகள் போன்றவற்றில் உபயோகப்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் பல லட்சம் ரூபாய் கட்டண பாக்கி வைத்துள்ளனர். அந்த வகையில் மின்துறையில் மட்டும் ரூ.116 கோடி வசூலாகாமல் இருந்தது.
இதை வசூலிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் அவர்கள் யாரும் அசைந்து கொடுக்கவில்லை. இந்தநிலையில் மின்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டத்தை கூட்டிய கவர்னர் கிரண்பெடி மின்துறையில் கட்டண பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை பொதுமக்கள் அறியும் வண்ணம் பத்திரிகைகளில் வெளியிட அறிவுறுத்தினார்.
அதன்படி மின் கட்டண பாக்கி வைத்துள்ளவர்களின் விவரங்களை மின்துறை பத்திரிகையில் வெளியிட்டு வருகிறது. மின் கட்டண பாக்கி வைத்துள்ளவர்கள் சமூகத்தில் பிரபலங்களாக இருப்பதால் உடனே அவர்கள் மின்கட்டணத்தை செலுத்த முன்வந்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.2½ கோடி மின்கட்டண பாக்கி வசூலானது. தனியார் நிறுவனம் ஒன்று மட்டும் ரூ.2 கோடி பாக்கி தொகையை செலுத்தியது.
இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி நேற்று பிற்பகலில் வம்பாகீரப்பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தில் ஆய்வு செய்தார். அப்போது மின்கட்டண பாக்கிகளை வசூல் குறித்து கேட்டறிந்தார். அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசனை வழங்கினார். அப்போது மின்துறை செயலாளர் பிரசாந்த் குமார் பாண்டே, கண்காணிப்பு பொறியாளர் ரவி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஆய்வினை தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி நிருபர்களிடம் கூறியதாவது:–
மின் கட்டண பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து மின் கட்டண பாக்கியை செலுத்த தொடங்கியுள்ளனர். இன்று (நேற்று) ஒரே நாளில் ரூ.2½ கோடி வசூலாகியுள்ளது. ஒரு நிறுவனம் ரூ.2 கோடி செலுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் நாம் பட்ஜெட்டிற்காக கடன் வாங்கினோம். ஆனால் இந்த ஆண்டு வருவாய் வரும் வழியை உருவாக்கவேண்டும்.
இதேபோல் கலால், வணிகவரி, உள்ளாட்சித்துறை என பல்வேறு துறைகளில் வரிபாக்கி உள்ளது. அவர்கள் குறித்த விவரங்களையும் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரிகளை ஆன்லைன் மூலம் செலுத்தவும் வசதி உள்ளது. வரிகளை செலுத்தாவிட்டால் எப்படி தரமான கல்வி, மருத்துவம், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முடியும்? எனவே பொதுமக்கள் தாமாக முன்வந்து வரிகளை செலுத்த வேண்டும்.
பொதுமக்கள் மின்கட்டணத்தை முறையாக செலுத்தி மின்இணைப்பு துண்டிப்பினை தவிர்க்கவேண்டும். இப்போதைய சூழ்நிலையில் வரிபாக்கியை வசூலிப்பது அவசியமாகி உள்ளது.
இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறினார்.