வாலாஜா அரசு மருத்துவமனையில் மாணவிக்கு சிகிச்சை அளித்த காவலாளி:பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை

வாலாஜா அரசு மருத்துவமனையில் விஷம் குடித்த மாணவிக்கு காவலாளி சிகிச்சை அளித்துள்ளார். மருத்துவ பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின் அந்த காவலாளியை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.

Update: 2018-06-27 22:15 GMT
வாலாஜா,

வாலாஜா அரசு மருத்துவமனையில் விஷம் குடித்த மாணவிக்கு காவலாளி சிகிச்சை அளித்துள்ளார். அதை தொடர்ந்து மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின் அந்த காவலாளியை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.

காட்பாடியை அடுத்த திருவலம் அரசுப்பள்ளியில் கடந்த 25-ந் தேதி பிளஸ்-2 படிக்கும் 17 வயது மாணவி ஒருவர், தன்னுடைய பள்ளி ஆசிரியை திட்டியதால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாவில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த நேரத்தில் மருத்துவமனையில் டாக்டர், செவிலியர்கள் பணியில் இல்லை. அப்போது அங்கு பணியில் இருந்த காவலாளி இளங்கோ, மாணவிக்கு சிகிச்சைக்காக குளுக்கோஸ் ஏற்றியதாக கூறப்படுகிறது. இதனை கண்டு மாணவியின் குடும்பத்தினர் மற்றும் அங்கு சிகிச்சை பெற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள், மருத்துவ உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வேலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின் வாலாஜாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார்.

பின்னர் அவர் கூறுகையில், கடந்த 25-ந் தேதி இரவு 7 மணி அளவில் மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்த 6 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அந்த நேரத்தில் மாணவியும், தீவிர அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். அப்போது மருத்துவமனை காவலாளி இளங்கோ அங்கு சென்றுள்ளார். அவர் குளுக்கோஸ் ஏற்றி, அங்குள்ள ஊசியின் கேப்டிராவில் போட்டுள்ளார். ஆனால் அவர் மாணவிக்கு சிகிச்சை அளிக்கவில்லை. இருந்தாலும் சிகிச்சை பெற்ற நோயாளியிடம் காவலாளி சென்றது குற்றமாகும்.

எனவே, காவலாளி இளங்கோவை பணியிடை நீக்கம் செய்துள்ளேன். மேலும் அப்போது பணியில் இருந்த 2 செவிலியர்களுக்கும் நோட்டீஸ் (மெமோ) கொடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

மாணவிக்கு சிகிச்சை அளித்த காவலாளி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது வாலாஜா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்