வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
வாசுதேவநல்லூர்,
வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
அர்த்தநாரீஸ்வரர்
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் அர்த்தநாரீஸ்வரர் என்ற சிந்தாமணி நாதர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா கடந்த 19–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்மாளுக்கு சிறப்பு பூஜைகள், திருவீதி உலா, பக்தி சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக 9–ம் திருநாளான நேற்று காலை 7 மணிக்கு அம்மையப்பன் திருத்தேரில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து தேரோட்ட மண்டகப்படித்தாரரான வாசுதேவநல்லூர் தொழிலதிபர் எஸ்.தங்கப்பழம் குடும்பத்தினரால் அலங்காரம் செய்யப்பட்ட திருத்தேரை எஸ்.தங்கப்பழம் வடம்பிடித்து மதியம் 1.30 மணிக்கு தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். பஞ்சவாத்தியங்கள் முழங்க திருத்தேர் கோவில் முன்பு புறப்பட்டு நான்கு ரதவீதிகளின் வழியாக மாலை 3.45 மணிக்கு நிலையத்தை வந்தடைந்தது.
தேரோட்டத்தில் மனோகரன் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, ஆய்வாளர் கண்ணன், செயல் அலுவலர்கள் ஜெயராமன், தங்கப்பாண்டியன், சதீஷ், எஸ்.தங்கப்பழம் கல்லூரி தாளாளர் எஸ்.டி.முருகேசன், நகரப்பஞ்சாயத்து செயல் அலுவலர் லெனின், பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி கமிட்டித்தலைவர் தவமணி, வாசுதேவநல்லூர் வட்டார அட்மா தலைவர் மூர்த்திப்பாண்டியன், நகர அ.தி.மு.க. செயலாளர் வக்கீல் குமரேசன், ஒன்றிய அவைத்தலைவர் முகமது உசேன், நிர்வாகிகள் சீமான் மணிகண்டன், சுமங்கலி சமுத்திரவேலு மற்றும் அனைத்து சமுதாய மண்டகப்படிதாரர்களும், ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சிவலிங்கசேகர் (வாசுதேவநல்லூர்), மாரீஸ்வரி (சிவகிரி), ஆடிவேல் (புளியங்குடி) மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று தெப்பத்திருவிழா
10–ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) தீர்த்தவாரி மண்டகப்படிதாரான இல்லத்துபிள்ளைமார் சமுதாயம் சார்பில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. காலை 9 மணிக்கு தீர்த்தவாரி கனகபல்லக்கில் அம்மையப்பன் திருவீதியுலாவும் மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் அம்மையப்பன் மண்டகப்படியில் இருந்து திருவீதியுலாவும் நடைபெறும்.
தெப்பத்திருவிழா மண்டகப்படிதாரரான நாடார் உறவின்முறை சமுதாயம் சார்பில் இரவு 8 மணிக்கு 8–ஆம் ஆண்டு தெப்பத்திருவிழா நடக்கிறது. இதையொட்டி சிறப்பு வானவேடிக்கைகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை வாசுதேவநல்லூர் நாடார் உறவின்முறை சமுதாயத்தினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.