தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஏராளமான தடயங்கள் சிக்கி உள்ளன சி.பி.சி.ஐ.டி. போலீசார் தகவல்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஏராளமான தடயங்கள் சிக்கி உள்ளன என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஏராளமான தடயங்கள் சிக்கி உள்ளன என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.
துப்பாக்கி சூடு
தூத்துக்குடியில் கடந்த மாதம் 22–ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதும மக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக போலீசார் துப்பாக்கி சூடு, தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்குகள் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் ஆவணங்களை சேகரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. வழக்கில் முக்கிய ஆவணங்களான பிரேத பரிசோதனை அறிக்கை கோர்ட்டு மூலம் பெறப்பட்டு உள்ளது. துப்பாக்கி சூடு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக 303 ரக துப்பாக்கிகள் 5, எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கிகள் 5, கைத்துப்பாக்கிகள் 3–ம் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
துப்பாக்கி தோட்டாக்கள்
இந்த துப்பாக்கிகள் சுத்தம் செய்து ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த துப்பாக்கிகளை கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சேதம் அடைந்த கார்களும் சோதனை செய்யப்பட்டன.
மேலும் கலவரம் நடந்த அனைத்து பகுதிகளிலும் தடயவியல் நிபுணர்கள், வெடிகுண்டு நிபுணர்கள், சி.பி.சி.ஐ.டி. போலீசார் அங்குலம் அங்குலமாக தடயங்களை தேடினர். இதில் 2 துப்பாக்கி தோட்டாக்கள், கண்ணாடி துண்டுகள், கற்கள் உள்பட பல தடயங்கள் சிக்கி உள்ளன.
குப்பைக்கிடங்கு
அதேநேரத்தில் கலவரம் நடந்த பல இடங்களில் மாநகராட்சி சார்பில் சுத்தம் செய்யப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டு விட்டன. இந்த குப்பைகள் அனைத்தும் தருவைகுளம் குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு உள்ளன. இதனால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் குப்பைக்கிடங்கில் கடந்த 3 நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தினர்.
அந்த குப்பைக்கிடங்கில் இருந்து மக்கள் சிலர் இரும்பு உள்ளிட்ட பழைய பொருட்களை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஏதேனும் தடயங்களை குப்பைக்கிடங்கில் இருந்து மக்கள் யாரேனும் எடுத்து விற்பனை செய்து இருக்கலாம் என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் குப்பை கிடங்கில் பழைய பொருட்கள் சேகரிப்பவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏராளமான தடயங்கள்
கடந்த 5 நாட்களாக நடந்து வரும் தேடுதல் வேட்டையில் துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளிட்ட ஏராளமான தடயங்கள் சிக்கி உள்ளன. இதில் பல தடயங்கள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இது தவிர 2 சாக்கு மூட்டைகளில் சந்தேகப்படும்படியான தடயங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. இதனை ஆய்வு செய்து வழக்குக்கு தொடர்புடைய ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்து வருகின்றனர். பல்வேறு தெருக்களிலும் தடயங்களை போலீசார் தேடி வருவதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.