முக்காணி தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை அமைக்கும் பணிகள் மழைக்காலத்துக்கு முன்பாக நிறைவு பெறுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
முக்காணி தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை அமைக்கும் பணிகள் மழைக்காலத்துக்கு முன்பாக நிறைவு பெறுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.;
ஆறுமுகநேரி,
முக்காணி தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை அமைக்கும் பணிகள் மழைக்காலத்துக்கு முன்பாக நிறைவு பெறுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
தடுப்பணை அமைக்கும் பணிபொதிகை மலையில் பிறந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளம் கொழிக்கச் செய்யும் தாமிரபரணி நதியானது புன்னக்காயலில் கடலில் சங்கமிக்கிறது. மழைக்காலங்களில் தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையாக திகழும் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை கடந்து பல ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.
இதையடுத்து குரங்கணி மற்றும் ஏரலை அடுத்த வாழவல்லான் ஆகிய இடங்களில் தாமிரபரணி ஆற்றில் தடுப்பணைகள் கட்டப்பட்டன. தொடர்ந்து ஆத்தூரை அடுத்த முக்காணி–சேர்ந்தபூமங்கலம் இடையில் தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நபார்டு வங்கி நிதியில் இருந்து ரூ.25 கோடியே 75 லட்சம் செலவில் 460 மீட்டர் நீளத்துக்கு தடுப்பணை கட்டும் பணி தொடங்கியது.
பணிகள் மும்முரம்கட்டுமான பணிகள் தொடங்கிய சில மாதங்களில் மழைக்காலம் தொடங்கியதால், கடந்த நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையிலும் கட்டுமான பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் அங்கு கடந்த மார்ச் மாதம் மீண்டும் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு, பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பணை அமைக்கும் இடத்தில் 7 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு, அதில் கான்கிரீட் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் மீது 4½ அடி உயரத்துக்கு தடுப்பணை அமைக்கப்பட்டு உள்ளது.
தடுப்பணையின் அடியில் மணல் அரிப்பு ஏற்படாத வகையில், அதன் இருபுறமும் சுமார் 10 அடி நீளத்துக்கு கான்கிரீட் தரைத்தளம் அமைக்கப்பட்டு உள்ளது. தடுப்பணையின் இருபுறமும் மண் அரிப்பு ஏற்படாத வகையில் உயரமான கான்கிரீட் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மழைக்காலத்துக்கு முன்பாக நிறைவுபெறுமா?தற்போது சுமார் 320 மீட்டர் தூரத்துக்கு தடுப்பணை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மீதி தூரத்தில் தடுப்பணை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. எனவே திட்டமிட்டபடி வருகிற ஆகஸ்டு மாதத்துக்குள் பணிகளை நிறைவு செய்யும் வகையில், இரவு பகலாக தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மழைக்காலத்துக்கு முன்பாக தடுப்பணையை கட்டி விட்டால், தாமிரபரணி ஆற்றில் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை கூடுதலாக சேமிக்க முடியும். இதன் மூலம் ஆத்தூர், பழையகாயல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர் பகுதிகளுக்கு கூடுதலாக குடிநீர் வினியோகம் செய்ய முடியும். அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயமும் செழிக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.