கடத்தூர் அருகே விபத்து: மதுபாட்டில்கள் ஏற்றிச்சென்ற லாரி -கார் மோதல்; ஒருவர் பலி

கடத்தூர் அருகே மதுபாட்டில்கள் ஏற்றிச்சென்ற லாரியும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார்.

Update: 2018-06-26 23:00 GMT
கடத்தூர்,

தர்மபுரியில் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு கொண்டு செல்ல மதுபாட்டில்கள் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. சிந்தல்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கடைகளுக்கு மதுபாட்டில்கள் இறக்க நேற்று மாலை சென்றது. கடத்தூர் அருகே உள்ள ஒடசல்பட்டியை கடந்து சென்றபோது லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிரே தென்கரைகோட்டையில் இருந்து கிருஷ்ணகிரியை சேர்ந்த நூர்பாஷா (வயது 40) என்பவர் ஓட்டிவந்த கார் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் காரை ஓட்டி வந்த நூர்பாஷா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். லாரியை ஓட்டி வந்த டிரைவர் பனங்காடு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் படுகாயம் அடைந்தார்.

மோதிய வேகத்தில் லாரி கவிழ்ந்தது. இதில் லாரியில் பெட்டிகளில் இருந்த மதுபாட்டில்கள் ரோட்டில் விழுந்து உடைந்தன. பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த கடத்தூர் போலீசார், படுகாயம் அடைந்த கிருஷ்ணனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடையாத மதுபாட்டில்கள் சேகரிக்கப்பட்டு தர்மபுரிக்கு மாற்று வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்