கட்டப்பஞ்சாயத்து செய்து கொடுமைப்படுத்துவதாக குடும்பத்துடன், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்

கட்டப்பஞ்சாயத்து செய்து கொடுமைப்படுத்துவதாக வாலிபர் குடும்பத்துடன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார்.;

Update: 2018-06-26 22:30 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா ஜோகிர் பாளையம் கிராமத்தை சேர்ந்த வாலிபர் சந்துரு (வயது21). இவர் தனது குடுபத்தினருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். நான் எங்கள் ஊரை சேர்ந்த வேறு சமுதாயத்தைச் சேர்ந்த தெய்வானை என்ற பெண்ணை காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு ஒசஅள்ளி கோவிலில் திருமணம் செய்து கொண்டேன். இதனால் பிரச்சினை ஏற்படும் என நாங்கள் திருமணத்திற்கு பின்னர் எங்கள் கிராமத்திற்கு செல்லவில்லை. கிராமத்தில் என்னுடைய தந்தை, தாய் மற்றும் தம்பி ஆகியோர் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நான், மனைவி மற்றும் குழந்தையுடன் கிராமத்திற்கு சென்றேன். ஆனால் கிராமத்திற்குள் வரக்கூடாது என சிலர் வீட்டை பூட்டி, சுற்றிலும் வேலி அமைத்தனர். வீட்டிற்கு வெளியில் உள்ள கொட்டகையில் எனது தாய், தந்தையை அடைத்து வைத்து, அடியாட்கள் காவலுக்கு இருக்கின்றனர். ரூ.3 லட்சம் ஊருக்கு அபராதம் செலுத்தினால் தான் எனது தாய், தந்தை வீட்டில் இருக்க முடியும் என கட்டப்பஞ்சாயத்து பேசினார்கள்.

பின்னர் ஒரு லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். இதனால் தாய், தந்தை உணவின்றி, உடையின்றி கொடுமையை அனுபவித்து வருகின்றனர். எனவே, கட்டப்பஞ்சாயத்து பேசி எங்களை கொடுமைப்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்