போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நாராயணசாமி தொடங்கிவைத்தார்
சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு புதுவையில் போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலத்தை முதல்–அமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்.
புதுச்சேரி,
சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பாரத மாதா போதை மீட்பு மையம் சார்பில் புதுவையில் போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. கம்பன் கலையரங்கில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை முதல்–அமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சிவா, தீப்பாய்ந்தான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஊர்வலத்தில் பல்வேறு செவிலியர் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்கள் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர். இந்த ஊர்வலம் அண்ணாசாலை, காமராஜ் சாலை, லெனின் வீதி, மறைமலையடிகள் சாலை வழியாக வந்து புதிய பஸ் நிலையம் அருகே முடிவடைந்தது.