தொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்படுகிறார்: கிரண்பெடி மீது வழக்கு தொடருவேன், நாராயணசாமி ஆவேசம்

தொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்படும் கவர்னர் கிரண்பெடி மீது வழக்கு தொடருவேன் என்றும் முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2018-06-26 23:30 GMT

புதுச்சேரி,

புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழக கவர்னர் ஆய்வுப்பணி மேற்கொள்வதற்கு தி.மு.க., காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் கவர்னர் ஆய்வுக்கு செல்வதை தடுத்தால் 7 ஆண்டு சிறை என்று கவர்னர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்திய தண்டனை சட்ட விதிகளின்படி கவர்னர் அவரது அலுவலகத்தில் பணிபுரியும்போது தடுப்பதுதான் குற்றமாகும். அவர் மாவட்டங்களில் ஆய்வு செய்ய செல்லும்போது எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. அது எந்தவித குற்றத்திலும் வராது. இந்த விவரம் தெரியாமல் தமிழக கவர்னர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதை அப்படியே காப்பி அடித்து புதுச்சேரி கவர்னர் கிரண்பெடியும் ஆய்வுக்கு செல்லும் தன்னை தடுத்தாலும் 7 ஆண்டு சிறை என்று கூறியுள்ளார். இந்தியாவில் எந்த மாநிலமாக இருந்தாலும் ஜனாதிபதி, பிரதமர், கவர்னர் என யாராக இருந்தாலும் மாநில அரசின் அன்றாட நிகழ்ச்சிகளில் தலையிட அதிகாரம் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அனுமதியின்றி முடிவு எடுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.

கவர்னர், முதல்–அமைச்சர், அமைச்சர்கள் அவர்கள் பணிபுரியும் அலுவலகத்தில் பணிசெய்வதை தடுத்தால்தான் குற்றமாகும். வெளியில் ஆய்வுக்கு செல்லும்போது போராட்டம் நடத்த அனுமதி உள்ளது. நாம் சர்வாதிகார ஆட்சியில் இல்லை. ஜனநாயக ஆட்சியில் உள்ளோம். அரசின் திட்டங்களுக்கு யாரும் முட்டுக்கட்டை போடக்கூடாது. அதனால்தான் பாகூரில் ஆய்வுக்கு சென்றபோது, 11 முறை ஆய்வுக்கு வந்து என்ன செய்தீர்கள்? என்று கவர்னரை பார்த்து மக்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் சொல்ல முடியாமல் கவர்னர் திரும்பி வந்துள்ளார். பொதுமக்களுக்கு கேள்வி கேட்க உரிமை உள்ளது.

முதல்–அமைச்சர், துறை அமைச்சருக்கு தெரிவிக்காமல் அரசு அலுவல் சம்பந்தமாக ஆய்வு செய்ய கவர்னருக்கு அதிகாரம் இல்லை. இதுதொடர்பாக கவர்னர் கிரண்பெடிக்கு கடிதம் மூலமும், நேரிலும் தெரிவித்துள்ளேன். ஆனால் அவர் தொடர்ந்து விதிகளை மீறி செயல்படுகிறார். நிர்வாகம் சம்பந்தமான விவரம் தெரியாமல் காவல்துறை அதிகாரிபோல் செயல்படுகிறார்.

தமிழக கவர்னரின் செயலை ஒட்டுமொத்த அரசியல் கட்சி தலைவர்களும் கண்டித்துள்ளனர். ஆனால் புதுவை கவர்னரிடம் பலமுறை எடுத்துக்கூறியும் பலனில்லை. அவர் இஷ்டப்படி செயல்பட தன்னார்வல தொண்டு நிறுவனத்தில் பணிபுரியலாம். அவரது செயல்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி ஆகியோரிடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளேன்.

ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை. கவர்னரின் செயல்பாடு தொடர்பாக முதல்–அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தேவைப்பட்டால் நானும் வழக்கு தொடருவேன். இப்போதுகூட கவர்னரின் நடவடிக்கை குறித்து பிரதமரை சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளேன். அவர் நேரம் கொடுத்தால் நேரில் சந்தித்து பேசுவேன்.

கடந்த சில நாட்களாக பிரதமர் மற்றும் பாரதீய ஜனதா தலைவர்கள் அவசர கால பிரகடன நிலை தொடர்பாக விமர்சித்து வருகிறார்கள். நாட்டில் அறிவிக்கப்படாத அவசர கால பிரகடன நிலையை நடத்தி வருபவர்கள் அவர்கள் தான்.

சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகின்றனர். சில மாநிலங்களில் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு ஆட்சிமாற்றம் செய்கின்றனர். நீதித்துறையிலும் தலையிடுகின்றனர். எனவே அவர்களுக்கு அவசர கால பிரகடன நிலை குறித்து பேச தகுதி இல்லை.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மேலும் செய்திகள்