கோரிக்கைகளை வலியுறுத்தி விதவை பெண்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி விதவை பெண்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-06-26 22:45 GMT
கரூர்,

கரூர் தாலுகா அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட சுவாதி பெண்கள் இயக்கம், விதவை பெண்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பு மற்றும் தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, சுவாதி பெண்கள் இயக்க தலைவி ஜெயம்மாள் தலைமை தாங்கினார். பொருளாளர் மஞ்சுளா முன்னிலை வகித்தார். விதவை பெண்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எழிலரசி, மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜானகி ஆகியோர் மது மற்றும் போதை பழக்கத்தினால் சமூகத்திற்கு ஏற்படும் சீரழிவுகள் குறித்து பேசினர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம்

ஆர்ப்பாட்டத்தில், விதவைகளுக்கான சம உரிமைகளை நிலைநாட்டும் விதமாக விதவைகள் பாகுபாடு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும். விதவை சான்று மற்றும் ஓய்வூதியம் எவ்வித நிபந்தனையுமின்றி வழங்கிட வேண்டும். அரசு மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகளில் விதவை மற்றும் அவர்களுடைய குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இளைய தலைமுறையினரை சிந்திக்க விடாமல் சீரழித்து வரும் அனைத்து போதை பொருட்களையும் தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும். சினிமா மற்றும் டி.வி. சீரியல்களில் மது மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்தும் காட்சிகளை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில், சுவாதி பெண்கள் இயக்கம் துணை தலைவி பாக்கியம் உள்பட பெண்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்