ஜெருசலேம் புனித பயணம் செல்லும் கிறிஸ்தவர்கள் தமிழக அரசின் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம், கலெக்டர் லதா தகவல்

ஜெருசலேம் புனித பயணம் செல்லும் கிறிஸ்தவர்கள் தமிழக அரசின் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.

Update: 2018-06-26 22:15 GMT

சிவகங்கை,

கலெக்டர் லதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவுது:– தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறித்தவர்கள் ஜெருசலத்திற்கு புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20ஆயிரம் வரை நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் கிறித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

அதன்படி இந்த புனித பயணம் பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறித்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இந்த புனித பயணம் ஜூலை 2018 முதல் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக்காலம் 10 நாட்கள் வரை இருக்கும். இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்து கட்டணம் ஏதுமின்றி பெறலாம்.

இதற்கான நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியன www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம் என்று குறிப்பிட்டு மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர், பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 807(5வது தளம்), அண்ணாசாலை, சென்னை–600002 என்ற முகவரிக்கு வரும் ஜூலை மாதம் 6–ந்தேதி மாலை 5.45 மணிக்குள் பெறும் வகையில் அனுப்ப வேண்டும். நேரில் வர தேவையில்லை. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்