ஊட்டியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி கலெக்டர் வழங்கினார்

ஊட்டியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

Update: 2018-06-26 22:15 GMT

ஊட்டி,

தொழிலாளர் நல வாரியம் சார்பில், கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஊட்டியில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாதந்தோறும் 5 பேருக்கு தலா ரூ.ஆயிரம் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை, கட்டுமான பணியின் போது பணியிடத்தில் விபத்து மூலம் உயிரிழந்த 2 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் ரூ.5 லட்சத்துக்கான காசோலைகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

அதனை தொடர்ந்து 10 பேருக்கு (கட்டுமான தொழிலாளர்கள்) புதிதாக பதிவு செய்யப்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கட்டுமான தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், அரசு சலுகை மற்றும் கட்டுமான பணி மேற்கொள்பவர்களில் பதிவு செய்யப்படாத தொழிலாளர்கள், உடனடியாக தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்), தொழிலாளர் நல அலுவலகம், ஸ்டேட் பாங்க் லேன், ஊட்டி–643001 என்ற முகவரி மற்றும் 0423–2448524 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். அங்கு உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெறலாம்.

கூடலூரில் இன்று (புதன்கிழமை) உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் தொழிலாளர் உதவி ஆணையர் (தோட்டங்கள்) அலுவலகத்தில் நடைபெறுகிறது. முகாமில் நல வாரியத்தின் உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டு, அடையாள அட்டை பெறுபவர்களுக்கு மட்டுமே தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் கிடைக்கும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். இதில் தொழிலாளர் உதவி ஆணையர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்