சத்தியமங்கலத்தில் 225 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

சத்தியமங்கலத்தில் 225 கிலோ எடைகொண்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நடவடிக்கை எடுத்து உள்ளார்.

Update: 2018-06-26 22:00 GMT

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கலைவாணி மற்றும் அலுவலர்கள் மணி, கேசவராஜ், சதீஷ், குழந்தைவேலு ஆகியோர் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை பகுதியில் உள்ள கடைகளில் நேற்று திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

வடக்குப்பேட்டை வாரச்சந்தை பகுதியில் உள்ள ஒரு கடையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆனால் கடையில் புகையிலை பொருட்கள் எதுவும் இல்லை. அப்போது கடையின் உள்புற பகுதியில் சாக்கு மூட்டை ஒன்று இருந்தது. அந்த சாக்கு மூட்டையை அவிழ்த்து பார்த்தபோது அதில், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (கான்ஸ், பான்பராக்) இருந்தன. மொத்தம் 75 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அதிகாரிகள் கடையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தியதில், புகையிலை பொருட்கள் திப்பு சுல்தான் ரோட்டில் உள்ள ஒரு கடையில் இருந்து வாங்கி வந்ததாக கூறினார்.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் திப்பு சுல்தான் ரோட்டில் உள்ள அந்த கடைக்கு விரைந்து சென்றனர். பின்னர் அந்த கடையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த கடையில் இருந்து சுமார் 150 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கலைவாணி கூறுகையில், ‘சத்தியமங்கலம் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது என்று ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் இன்று (நேற்று) சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை மற்றும் திப்புசுல்தான் ரோட்டில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினோம். இந்த சோதனையில், 225 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மேலும் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளர்கள் மீது விரைவில் வழக்கு தொடரப்படும்’ என்றார்.

மேலும் செய்திகள்