இளைஞர்கள் போதைப்பழக்கத்துக்கு ஆளாகாமல் நாட்டுப்பற்றுடன் வளர வேண்டும் போலீஸ் ஐ.ஜி.பாரி அறிவுரை

இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு ஆளாகாமல் நாட்டுப்பற்றுடன் வளர வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போலீஸ் ஐ.ஜி.பாரி பேசினார்.

Update: 2018-06-26 23:00 GMT

கோவை,

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை போதைப்பொருள் குற்ற தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு சார்பில் கோவையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கலெக்டர் ஹரிகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா, போக்குவரத்து துணை கமி‌ஷனர் சுஜித்குமார், குற்றப்பிரிவு துணை கமி‌ஷனர் பெருமாள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ–மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பேரணி கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக கோவை வ.உ.சி. மைதானத்தை வந்தடைந்தது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் மது, கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கத்துக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பியபடி வந்தனர். மேலும் விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் பிடித்தபடி வந்தனர்.

கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பாரி தலை மை தாங்கினர். இதையடுத்து போதைப்பொருள் எதிர்ப்பு தின கட்டுரை, சிறந்த வாசகங்கள் எழுதுதல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழை போலீஸ் ஐ.ஜி.பாரி வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:–

இந்தியாவில் 65 சதவீதம் பேர் இளைஞர்களாக உள்ளனர். எனவே இளைஞர்கள் எவ்வித போதை பழக் கத்திற்கும் ஆளாகாமல் நாட்டுப்பற்றுடன் வளர வேண்டும். போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பாமர மக்களிடம் எடுத்து கூற வேண்டும். தாய்மொழியை நேசிக்க வேண்டும். எவ்வித தீய பழக்கங்களும் இன்றி நன்றாக படித்தால் தான் வாழ்வில் முன்னேற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்