திசையன்விளை மார்க்கெட்டில் மீன்கள் விலை கடும் வீழ்ச்சி சீலா ரகம் கிலோ ரூ.200 முதல் ரூ.400–க்கு விற்பனை

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நெல்லை மாவட்டம் திசையன்விளை மார்க்கெட்டில் மீன்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளன. சீலா மீன் கிலோ ரூ.200 முதல் ரூ.400–க்கு விற்கப்படுகிறது.

Update: 2018-06-26 21:15 GMT

திசையன்விளை, 

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நெல்லை மாவட்டம் திசையன்விளை மார்க்கெட்டில் மீன்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளன. சீலா மீன் கிலோ ரூ.200 முதல் ரூ.400–க்கு விற்கப்படுகிறது.

மீன் மார்க்கெட்

நெல்லை மாவட்டம் திசையன்விளை வளர்ந்து வரும் நகரமாகும். இங்கு மீன் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு ராமேசுவரம், தூத்துக்குடி, மணப்பாடு, உவரி, பெரியதாழை ஆகிய ஊர்களில் இருந்தும் மீனவர்கள் மீன்களை விற்பனைக்காக கொண்டு வருவர். திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் இந்த மீன் மார்க்கெட்டுக்கு தான் வந்து மீன் வாங்கி செல்வர். மீன் மார்க்கெட் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் இயங்கும். இதனால் எப்போதும் இந்த மார்க்கெட் மக்கள் கூட்டமாகவே காணப்படும். குறிப்பாக திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை ஆகிய நாட்களில் அதிகளவில் மக்கள் கூட்டம் இருக்கும். இதனால் திசையன்விளை மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை களை கட்டும்.

விலை கடும் வீழ்ச்சி

இந்த நிலையில் தென்மேற்கு பருவ காற்று காரணமாக தமிழ்நாடு மற்றும் கேரள கடற்கரையில் மீன்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நேற்று நெல்லை மாவட்ட கடற்கரை பகுதிகளான உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, இடிந்தகரை, கூத்தன்குழி உள்ளிட்ட மீனவர் கிராமங்களில் உள்ள நாட்டு படகு மீனவர்கள் வலையிலும், அதிக அளவில் மீன்கள் பிடிபட்டன. இதன் காரணமாக திசையன்விளை மீன் மார்க்கெட்டுக்கு அதிக அளவில் மீன்கள் விற்பனைக்கு வந்தன. இதனால் மீன்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது.

முன்பு கிலோ ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்பட்ட சீலா ரக மீன்கள் கிலோ ரூ.200–க்கும், பெரிய ரக சீலா மீன்கள் கிலோ ரூ.400–க்கும், அதைவிட பெரிய ரக மீன்கள் கிலோ ரூ.500–க்கும் விற்பனை செய்யப்பட்டது. வழக்கமாக கிலோ ரூ.600–க்கு விற்பனை செய்யப்படும் குதிப்பு ரக மீன்கள் கிலோ ரூ.300–க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் வலை மீன்கள் முன்பு கிலோ ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படும். கிலோ ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் மற்ற பொடி ரகமீன்கள் கிலோ ரூ.50–க்கும், சாளை ரக மீன்கள் கிலோ ரூ.60–க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதனால் மீன்கள் வாங்க வந்த பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் அதிக மீன்களை வாங்கி சென்றனர்.

வியாபாரிகள் கவலை

இதுகுறித்து மீன் வியாபாரி ஒருவரிடம் கேட்டபோது, தற்போது தென்மேற்கு பருவ காற்று வீசுவதாலும், கேரள மாநிலத்தில் மழைக்காலம் என்பதாலும் கடலில் அதிக அளவில் புதிய நீர் கலக்கிறது. இதனால் மீன் உற்பத்தி அதிகமாக உள்ளது. இதனால் ராமேசுவரம், கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, களியக்காவிளை மற்றும் கேரள மாநில பகுதிகளில் அதிக அளவில் மீன்கள் பிடிபடுகின்றன. இதனால் மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் அதிக அளவில் மீன்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். மீன்களின் வரத்து அதிகமாக இருப்பதால், விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது என்றார்.

பொதுமக்கள் மகிழ்ச்சியாக மீன்களை வாங்கி சென்றாலும், கடும் விலை வீழ்ச்சியால் வியாபாரிகள் பெரிதும் கவலை அடைந்தனர்.

மேலும் செய்திகள்