உயிரைப் பறிக்கும் போதைப் பொருள் வேண்டாம்
உலகம் முழுவதும் ஏறத்தாழ மொத்த மக்கள் தொகையில் 3.6 முதல் 6.6 சதவீதம் பேர் வரை போதைப் பழக்கத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
ஆண்டு தோறும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேரின் உயிரை போதைப் பழக்கம் பறிக்கிறது. போதை பழக்கத்தால் உலகம் முழுவதும் குற்றங்கள், விபத்துகள், கலாசார சீரழிவுகள் அதிகரித்துவிட்டன. இது ஒரு நாட்டின் வளர்ச்சியையும் கவுரவத்தையும் பாதிக்கும் அளவுக்கு கொடிய வடிவம் எடுத்துள்ளது. நாடுகளின் பொருளாதார வளர்ச்சியையும் கடுமையாக பாதித்துள்ளது.
இதில் புகையிலை, மது, கஞ்சா ஆகியவை இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இதே போல, கஞ்சா, ஆம்பிட்டமின் போன்றவை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும், ஹெராயின், எல்.எஸ்.டி. போன்றவை வடஅமெரிக்காவிலும், ஓப்பியம் கலந்த போதைப் பொருட்கள் மற்றும் பிரவுன் சுகர் மத்திய கிழக்கு ஆசியாவிலும், பென்டானில், எல்.எஸ்.டி., பிரவுன் சுகர், ஹெராயின் போன்றவை வளர்ந்த நாடுகளிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.
இந்த போதைப்பொருட்கள் கல்லீரல், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதித்து அகால மரணத்தை உண்டாக்கும் சக்திவாய்ந்தவை. அதுமட்டுமல்லாது இன்று மனித உயிருக்கு உலை வைக்கும் இருதயநோய், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட 10 கொடிய நோய்கள் வருவதற்கு போதை பொருட்கள் காரணமாக திகழ்கின்றன. போதை பழக்கத்துக்கு அடிமையான இளவயதினர் ஏராளமானோர் தற்கொலை செய்து உயிரை மாய்ந்து இருக்கிறார்கள்.
எனவே, போதைப் பழக்கத்திற்கு நாம் அடிமையாகாமல் வாழ வேண்டியது அவசியமாகிறது. அதுமட்டுமின்றி, போதைப் பழக்கத்திற்கு ஆளாகி மீள வழி தெரியாமல் தவிப்போரை அதிலிருந்து மீட்டு புதிய பாதைக்கு மாற்ற நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். போதைப் பொருட்கள் பற்றிய தீமைகளை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அறிவை அழித்து, உடலை வாட்டி, உயிரைப் பறிக்கும் போதைப் பொருட்கள் இல்லாத புதிய உலகம் படைப்போம். இன்று (ஜூன் 26-ந்தேதி) உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம்.
டாக்டர் ஆர்.வி.எஸ்.சுரேந்திரன்,
துணைத் தலைவர்,
தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில்
துணைத் தலைவர்,
தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில்