கல்லால் அடித்து கொலை செய்து வேலைக்கார வாலிபரின் உடலுடன் ‘செல்பி’ எடுத்த சட்ட கல்லூரி மாணவர்

மனைவியை ஆபாசமாக வர்ணித்த வேலைக்கார வாலிபரை கல்லால் அடித்து கொலை செய்து, அவரது உடலுடன் ‘செல்பி’ எடுத்த சட்ட கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-06-25 23:36 GMT
அவுரங்காபாத்,

அவுரங்காபாத்தை சேர்ந்தவர் மோகித் (வயது23). இவருக்கு மனைவி மற்றும் பெண் குழந்தை உள்ளது. மோகித்தும், அவரது மனைவியும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். மோகித் சட்ட கல்லூரியில் படித்து வருகிறார்.

இவர் புல்தானாவில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு அவ்வப்போது சென்று வருவது வழக்கம். அப்போது தனது சகோதரி வீட்டில் வேலை பார்த்து வந்த பிரபாகர் என்ற வாலிபருடன் மோகித்துக்கு நட்பு ஏற்பட்டது. தனது சகோதரியின் வீட்டுக்கு செல்லும் நேரங்களில் பிரபாகருடன் சேர்ந்து மது குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

சம்பவத்தன்றும் புல்தானாவுக்கு சென்றிருந்த மோகித் பிரபாகருடன் ேசர்ந்து மது குடித்து உள்ளார். அப்போது, அவரது மனைவியை பிரபாகர் ஆபாசமாக வர்ணித்து உள்ளார்.

இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த மோகித் அங்கு கிடந்த கல்லை எடுத்து சரமாரியாக தாக்கி பிரபாகரை கொலை செய்தார். பின்னர் அவரது உடலுடன் ‘செல்பி’ எடுத்து, அதை தனது மனைவிக்கு அனுப்பி வைத்து உள்ளார். பின்னர் உடலை ஒரு சாக்குப்பையில் கட்டி காட்டுப்பகுதியில் வீசியுள்ளார்.

இதுபற்றிய தகவல் போலீசுக்கு கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மோகித்தை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில் காட்டுப்பகுதியில் கிடந்த பிரபாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோகித் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்