நெல்லை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக மகேந்தர் குமார் ரத்தோட் பொறுப்பேற்பு

மகேந்தர் குமார் ரத்தோட் நெல்லை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுக்கொண்டார்;

Update: 2018-06-25 22:47 GMT
நெல்லை,-

நெல்லை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக மகேந்தர் குமார் ரத்தோட் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர், “வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்“ என்று கூறினார்.

நெல்லை மாநரக போலீஸ் கமிஷனராக பணியாற்றிய திருஞானம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி ஓய்வு பெற்றார். அதன்பிறகு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் கூடுதலாக கவனித்து வந்தார். இந்த நிலையில் சென்னை தொழில்நுட்ப சேவைகள் பிரிவு டி.ஐ.ஜி. மகேந்தர் குமார் ரத்தோட் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

அவர் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அவருக்கு துணை கமிஷனர்கள் சுகுணாசிங், பெரோஸ் கான் அப்துல்லா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து அவரிடம் நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

புதிய போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்ட மகேந்தர் குமார் ரத்தோட் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். நெல்லை மாநகர பகுதியில் சட்டம்-ஒழுங்கு சீராக பராமரிக்கப்படும். நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த தேரோட்டத்துக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு போடப்படும். மணல் கொள்ளையை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநகர போலீஸ் அதிகாரிகளுடன் கலந்து பேசி நெல்லை மாநகரத்துக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய போலீஸ் கமிஷனர் மகேந்தர் குமார் ரத்தோட் சொந்த ஊர் ஐதராபாத் ஆகும். இவர், 2001-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்றார். சென்னை மடிப்பாக்கத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார்.

பின்னர் அவர் போலீஸ் சூப்பிரண்டாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு, ராமநாதபுரத்தில் பணியாற்றினார். தொடர்ந்து சென்னை அடையாறு துணை கமிஷனராகவும், மணிமுத்தாறு பட்டாலியனில் போலீஸ் சூப்பிரண்டாகவும், சென்னை தலைமையிடத்து துணை கமிஷனராகவும் பணியாற்றினார். பின்னர் பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டாகவும், சென்னை தொழில்நுட்ப சேவை டி.ஐ.ஜி.யாகவும் பணியாற்றினார். தற்போது அவர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்