17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் டி.டி.வி.தினகரன் பேட்டி

17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று மோகனூரில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2018-06-25 23:15 GMT
மோகனூர்,

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெவ்வேறு இடங்களில் உள்ள விநாயகர், காளியம்மன், மாரியம்மன் கோவில் மற்றும் நாவலடியான் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு கடந்த 17-ந் தேதி மகாகும்பாபிஷேகம் நடந்தது. தற்போது கும்பாபிஷேகம் நடந்த கோவில்களில் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.

இந்த மண்டல பூஜையில் கலந்து கொள்வதற்காக ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன் நேற்று காலை மோகனூர் வந்தார். மோகனூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் காளியம்மன், நாவலடியான் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். நாவலடியான் கோவிலில் உள்ள செல்லாண்டியம்மனுக்கு நடந்த சிறப்பு பூஜையில் அவர் கலந்து கொண்டார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

8 வழிச்சாலை அமைக்க விவசாயிகள் தானாக முன்வந்து நிலங்களை வழங்குவதாகவும், ஒரு சில விவசாயிகள் மட்டுமே எதிர்ப்பதாகவும் முதல்-அமைச்சர் கூறி இருக்கிறார். சேலத்தில் 36 கிலோ மீட்டர் தூரம் 8 வழிச்சாலை அமைப்பதை பொதுமக்கள் விரும்பவில்லை. இதில் முதல்-அமைச்சருக்கு பலன் இருக்கிறதோ இல்லையோ மக்களுக்கு பயன் இல்லை.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது மாவட்ட விவசாயிகளை ஒரு சட்டமன்ற உறுப்பினராக நேரில் சந்தித்து 8 வழி சாலை பயன்பாடு பற்றி பேச வேண்டும். அப்போதுதான் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும். நிறைய விஷயங்களில் அரசு பொய் பேசுவது பற்றி சேலம், நாமக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு தெரியும்.

சட்ட வல்லுனர்களை ஆலோசித்து தான் 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 17 எம்.எல்.ஏ.க்கள் வழக்கை நாளை(புதன்கிழமை) சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பன், நாமக்கல் மாவட்ட செயலாளர் அன்பழகன், மோகனூர் தேவநாதன், மோகனூர் ஒன்றிய செயலாளர் பாலசுப்ரமணி உள்பட பலர் உடன் சென்றனர். 

மேலும் செய்திகள்