காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்கள் 30-ந்தேதி வரை நடக்கிறது கலெக்டர் ராஜாமணி தகவல்

திருச்சி மாவட்டத்தில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்கள் வருகிற 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது என்று கலெக்டர் ராஜாமணி தெரிவித்து உள்ளார்.

Update: 2018-06-25 22:30 GMT
திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் வாகனம் மூலம் சென்று முகாம் நடத்தி காசநோய் கண்டறிவதற்கான நடமாடும் வாகனம் உள்ளது. இந்த வாகனத்தை திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் ராஜாமணி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற 2025-ம் ஆண்டுக்குள் திருச்சி மாவட்டத்தை காசநோய் இல்லாத மாவட்டமாக உருவாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக வரவழைக்கப்பட்டுள்ள சிறப்பு வாகனம் இன்று (செவ்வாய்க்கிழமை) மணப்பாறை நகராட்சி குதிரைபட்டி, கருங்குழிப்பட்டி, சங்கமரெட்டியபட்டி, வெள்ளக்கல் ஆகிய இடங்களிலும், நாளை (புதன்கிழமை) துவாக்குடிமலை தெற்கு, வடக்கு, வாழவந்தான் கோட்டை, குங்குமபுரத்திலும், 28-ந்தேதி துறையூர் கீரம்பூர், நாகலாபுரம், கொப்பம்பட்டி அடிவாரம், நாகநல்லூரிலும், 29-ந்தேதி சமயபுரம், பெரகம்பி, 94 கரியமாணிக்கம், வீரமணி பட்டி, சந்தைப்பாளையம், முசிறி கள்ளர்தெரு, வடுகபட்டியிலும், 30-ந்தேதி வாளாடி, தச்சங்குறிச்சி, புள்ளம்பாடி, கல்லக்குடி, மேலரசூர் ஆகிய பகுதிகளுக்கும் சென்று முகாமிடுகிறது. அப்போது பொதுமக்கள் காசநோய் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

நமது மாவட்டத்தில் கடந்த ஆண்டு மொத்தம் 30 ஆயிரத்து 483 பேருக்கு சளி பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது. இதில் 2 ஆயிரத்து 160 பேருக்கு காசநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் 1,836 நோயாளிகளுக்கு நேரடி மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பூரண குணம் அடைந்துள்ளனர். பன்மருந்து எதிர்ப்பு காசநோயாளிகள் 69 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்