மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கக்கோரி காலிக்குடங்களுடன் வந்த பெண்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார்.

Update: 2018-06-25 21:21 GMT

வேலூர்

ஒதியத்தூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கக் கோரி காலிக்குடங்களுடன் வந்த பெண்கள் கலெக்டர் அலுவலகத்தை சூழ்ந்து முற்றுகையிட்டனர். பின்னர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். அதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்கள் கோரிக்கைகள், குறைகள் ஆகியவற்றை மனுவாக எழுதி கொடுத்தனர்.

அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குறைதீர்வு நாள் கூட்டத்தில் கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 466 மனுக்கள் பெறப்பட்டன.

அணைக்கட்டு தாலுகா ஒதியத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தை சூழ்ந்து முற்றுகையிட்டனர். பின்னர் கலெக்டரிடம் மனு கொடுக்க முயன்றனர். அவர்களை, கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அதில் 10 பேரை மட்டும் கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளே அனுமதித்தனர்.

அவர்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் 450-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி குமளான் குட்டை கிராம எல்லையில் உள்ளது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலர் 4 ஆண்டுகளுக்கு முன்பாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து எங்கள் கிராமத்துக்கு வரும் குடிநீர் இணைப்புகளை துண்டித்து விட்டனர்.

இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக ஒதியத்தூரில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்படும் எனக் கூறினர். ஆனால் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால் குடிநீரின்றி அனைவரும் தவிக்கிறோம். எனவே எங்கள் கிராமத்தில் உடனடியாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறியிருந்தனர்.


வேலூரை அடுத்த செம்பேடு கிராம மக்கள், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் பல ஆண்டுகளாக வசிக்கும் 75 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். ஆனால், இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க உத்தரவிட வேண்டும், எனக் கூறியிருந்தனர்.

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகே போக்குவரத்துக்கு இடையூறு இன்றி பல ஆண்டுகளாக 40 தரைக்கடைகள் வைத்துள்ளோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பென்னாத்தூர் பேரூராட்சி அலுவலர் அங்கு வந்து ஆய்வு செய்தார். அதன்பின்னர் தரைக்கடை வைக்க வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும் தரைக்கடை வியாபாரிகளுக்கு அரசாங்கத்தால் உணவு தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரூராட்சி ஊழியர்கள் தரைக்கடைகளை உடனடியாக அகற்றும்படி அச்சுறுத்தினர். எனவே நாங்கள் தொடர்ந்து அப்பகுதியில் தரைக்கடைகள் வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும், எனக் கூறியிருந்தனர்.


வாணியம்பாடி தாலுகா புல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் கொடுத்த மனுவில், நான் ஆம்பூர் தாலுகா மலையாம்பட்டு மதுரா பகுதியைச் சேர்ந்த கவிதாவை கலப்புத் திருமணம் செய்து, வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தேன். பி.எட். படித்துள்ள எனக்கு கலப்புத் திருமண தம்பதி இட ஒதுக்கீட்டின்படி ஆசிரியர் வேலை வழங்கும்படி விண்ணப்பித்தேன். அதன்படி, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது.

அதில் திருப்பத்தூர் கோட்ட வன அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள வனப்பள்ளியில் ஆசிரியர் வேலைக்கான பரிந்துரை கடிதம் வழங்குவதற்காக 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந்தேதி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்தக் கடிதம் எனக்கு ஜூலை மாதம் 7-ந் தேதி தான் கிடைத்தது.

இதுகுறித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கேட்டதற்கு, மறு கடிதம் அனுப்பி விரைவில் பணி நியமன உத்தரவு வழங்கப்படும் எனக் கூறினர். ஆனால் இதுவரை எந்தக் கடிதமும் வரவில்லை. எனவே வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறியிருந்தார். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் ராமன் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக, கூறினார்.


கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வேலூர் தாலுகாவில் உள்ள 8 நபர்களுக்கு உதவித்தொகை மற்றும் மாவட்ட முஸ்லிம் மகளிர் மேம்பாட்டுச் சங்கத்துக்கு நிதியுதவியாக ரூ.1 லட்சத்துக்கான காசோலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராமன் வழங்கினார்.

அதில் மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயபிரகாஷ், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் பேபிஇந்திரா, மாவட்ட முஸ்லிம் பெண்கள் நலஉதவி சங்க உறுப்பினர் சையத் நிசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்