கவர்னர் மாளிகையின் எச்சரிக்கைக்கு தி.மு.க. ஒருபோதும் அஞ்சாது துரைமுருகன் பேட்டி

கவர்னர் மாளிகையின் எச்சரிக்கைக்கு தி.மு.க. ஒருபோதும் அஞ்சாது என்று தர்மபுரியில் அந்த கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறினார்.

Update: 2018-06-25 23:00 GMT
தர்மபுரி,

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கவர்னர் ஆய்வு செய்யும்போது தி.மு.க.வினர் கருப்புக்கொடி காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் ஆய்வு பணிக்கு செல்லும் கவர்னரை பணிசெய்யவிடாமல் தடுத்தால் 7 ஆண்டு சிறைதண்டனை மற்றும் அபராதம் விதிக்க சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கவர்னர் மாளிகை எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதுபோன்ற எச்சரிக்கைகளுக்கு எல்லாம் தி.மு.க. ஒருபோதும் அஞ்சாது.

நாங்கள் ஜவகர்லால்நேரு, இந்திராகாந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களுக்கே கருப்புக்கொடி காட்டியவர்கள். தற்போது பிரதமராக உள்ள நரேந்திரமோடிக்கு கூட கருப்புக்கொடி காட்டி உள்ளோம். கவர்னர் பதவியே தேவையற்ற ஒன்று என்பதுதான் தி.மு.க.வின் நிலைப்பாடு. இருந்தாலும் அரசியல் சட்டத்தில் கவர்னர் பதவி இருக்கும் வரை அந்த பதவியின் மாண்புகளை தி.மு.க. மதித்து நடக்கும்.

சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க தமிழக அரசு மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. இந்த திட்டத்தால் மலைகள் உடைக்கப்படும். லட்சக்கணக்கான மரங்கள் அழிக்கப்படும். ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். இந்த சாலையை அமைப்பதினால் யாருக்கும் பயன் இல்லை. வீடுகள், கடைகள் இடிக்கப்படுவதுடன் பல்வேறு அரசு பள்ளிகளும் இடிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த திட்டத்தை நிறைவேற்ற தமிழகஅரசு ஆர்வம் காட்டுவதற்கு காரணம் உள்ளது.

மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த அரசுக்கு கவலை இல்லை. மக்களின் கருத்தை கேட்டு விவசாயிகள், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அடாவடிதனமாக இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்