கடலில் குளித்துக்கொண்டிருந்த போது கத்தியால் குத்தி ஆடை வடிவமைப்பாளர் படுகொலை

வேளாங்கண்ணி கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது கத்தியால் குத்தி ஆடை வடிவமைப்பாளர் படுகொலை செய்யப்பட்டார். இளம்பெண் குளித்ததை படம் பிடித்து தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியால் அவர் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

Update: 2018-06-25 23:15 GMT
வேளாங்கண்ணி,

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா நாகை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் வீரையன். இவருடைய மகன் விக்ரம்(வயது 35). இவர், சென்னையில் சின்னத்திரை மற்றும் சினிமா கலைஞர்களுக்கு ஆடை தைத்துக் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். விக்ரம், கும்பகோணத்தில் உள்ள தனது அக்கா அனுராதா வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

அப்போது கும்பகோணம் காளியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ரமேஷ் மகள் நீலாவதியுடன்(21), விக்ரமுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலாவதி குளித்துக் கொண்டிருந்தபோது விக்ரம் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.

தான் செல்போனில் எடுத்த படத்தை நீலாவதியிடம் காட்டிய விக்ரம், தனது ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நீலாவதி இதற்கு மறுப்பு தெரிவித்தார்.

ஆனால் விக்ரம், தனது ஆசைக்கு இணங்காவிட்டால் இந்த படத்தை அனைவரிடமும் காட்டுவேன் என கூறி நீலாவதியை மிரட்டினார். இதனால் செய்வதறியாது திகைத்த நீலாவதி, கும்பகோணம் பெருமாள் கோவில் தெருவில் வசிக்கும் தனது நண்பர் ராகுலிடம்(23) இது குறித்து கூறினார்.

இந்நிலையில் விக்ரம், வேளாங்கண்ணிக்கு சென்று வரலாம் என கூறி நீலாவதியை அழைத்துள்ளார். இதை நீலாவதி, தனது நண்பர் ராகுலிடம் கூறினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நீலாவதியும், ராகுலும் சேர்ந்து விக்ரமை கொலை செய்ய முடிவு செய்தனர்.

இதன்படி நேற்று விக்ரமும், நீலாவதியும் வேளாங்கண்ணிக்கு வந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து ராகுலும் வேளாங்கண்ணிக்கு வந்தார். வேளாங்கண்ணி கடலில் நீலாவதியும், விக்ரமும் குளித்து கொண்டு இருந்தனர்.

அப்போது ராகுல், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விக்ரமின் மார்பில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த விக்ரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விக்ரமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நீலாவதியையும், ராகுலையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இளம்பெண் குளித்ததை படம் பிடித்து ஆசைக்கு இணங்க வற்புறுத்திய ஆடை வடிவமைப்பாளர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வேளாங் கண்ணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்