சேலம்-சென்னை 8 வழி சாலை பணிகளை நிறுத்தக்கோரி சேலத்தில், 4-ந் தேதி ஆர்ப்பாட்டம் முத்தரசன் பேட்டி

சேலம்-சென்னை 8 வழி சாலை பணிகளை நிறுத்தக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சேலத்தில், 4-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று நாகையில், முத்தரசன் கூறினார்.

Update: 2018-06-25 23:00 GMT
நாகப்பட்டினம்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், நாகையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நேற்று முன்தினம் தமிழக கவர்னர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை, தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. மாநிலத்தில் கவர்னராக இருப்பவர், அவரது விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது. கவர்னருக்கு பணிந்து செல்வது தமிழக அரசின் பலவீனத்தை காட்டுகிறது.

கவர்னரின் நடவடிக்கையை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம். அதற்காக 7 ஆண்டுகள் தண்டனையாக இருந்தாலும், அதனை அனுபவிக்க தயாராக உள்ளோம். ஜனநாயக நாட்டில், ஜனநாயகம் மீறப்படுவதை அனுமதிக்க முடியாது. மாநில அரசு எழுதப்படாத அடிமை அரசாக செயல்படுகிறது. கவர்னர், நாமக்கல் சென்றபோது அங்கு கருப்பு கொடி காட்டிய தி.மு.க.வினரை கைது செய்து சிறையில் அடைத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

சேலம்-சென்னை 8 வழி சாலைக்கான பணிகளை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லை என்றால் வருகிற 4-ந் தேதி(புதன்கிழமை) சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அதற்காக எங்களுக்கு சமூக விரோதி, தேச துரோகி, தீவிரவாதி என எந்த பட்டங்களை கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.

தமிழக அரசு உடனடியாக சாலை பணிகளை நிறுத்தி வைத்து, சேலத்தை சேர்ந்த மக்களின் கருத்தை கேட்க வேண்டும். அடக்குமுறை முயற்சி என்றைக்கும் வெற்றி பெறாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநிலக்குழு உறுப்பினர் செல்வராசு, மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்