டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய கார், பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி பெண் பலி

வேளாங்கண்ணிக்கு சென்று விட்டு திரும்பிய போது டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய கார், நாகூர் வெட்டாற்று பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், குழந்தை உள்பட 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2018-06-25 22:15 GMT
நாகூர்,

சென்னை கோட்டூர் பொண்ணு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முரளிகிருஷ்ணா. இவருடைய மனைவி கிருஷ்ணகுமாரி (வயது46). இவருடைய உறவினர்கள் அதேபகுதியை சேர்ந்த மதனகோபால் மனைவி சுகுணா (66), எத்திராஜ் மகன் ராஜ்குமார் (35), இவருடைய மனைவி பிரீத்தி (25), மகள் ஜெயநவீதா (2½). இவர்கள் 5 பேரும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள ஆரோக்கிய மாதா பேராலயத்துக்கு பிரார்த்தனை செய்வதற்காக காரில் வந்தனர். பின்னர் அவர்கள் பிரார்த்தனையை முடித்து விட்டு நேற்று முன்தினம் மாலைசென்னை செல்வதற்காக வேளாங்கண்ணியில் இருந்து காரில் புறப்பட்டனர். காரை ராஜ்குமார் ஓட்டினார். கார் புத்தூர் - வாஞ்சூர் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது நாகூர் வெட்டாற்று பாலத்தில் சென்ற போது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது.

இதனால் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்த வழியாக சென்றவர்கள் காரில் சிக்கியிருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணகுமாரி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்