மேல்பேரட்டி ஊராட்சியில் சாலை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

மேல்பேரட்டி ஊராட்சி மேல்பாரத்நகரில் சாலை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2018-06-25 22:45 GMT

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுக்களாக எழுதி கொடுத்தனர். அதன்படி, குன்னூரை அடுத்த பேரட்டி ஊராட்சி மேல்பாரத்நகர் பொது மக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:–

மேல்பாரத்நகரில் கடந்த 40 ஆண்டுகளாக 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பேரக்சில் இருந்து மேல்பாரத்நகருக்கு 1½ கிலோ மீட்டர் தூரம் சாலை வசதி இல்லை. இதனால் சேறும், சகதியுமான ஒத்தையடி பாதையில் நடந்து சென்று வர வேண்டி உள்ளது. மேலும், பெண்கள், முதியவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வர முடியாத நிலை உள்ளது. எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்ட சாலை வசதி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஊட்டி அருகே மைனலை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், மைனலை கிராமத் தில் தேயிலை, வால்பேரி, பிளம்ஸ் உள்ளிட்ட பழங்களை பயிரிட்டு உள்ளோம். எங்களின் விளை நிலங்களுக்குள் காட்டெருமை, கரடி போன்றவை புகுந்து பழங்களை அழித்து நாசம் செய்கிறது. இதனால் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே விளைநிலத்தை சுற்றி வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கம்பி வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

ஊட்டி அருகே மீக்கேரி கிராம மக்கள் மற்றும் சுவாமி விவேகானந்த முன்னேற்ற சங்கத்தினர் கொடுத்த மனுவில், ஊட்டியில் இருந்து தங்காடு, கன்னேரிமந்தனை, எடக்காடு, மேல்குந்தா மற்றும் முள்ளிகூர் செல்லும் அரசு பஸ்கள் மீக்கேரி கிராமம் வழியாக கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வந்தது. இதனால் அங்குள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் தங்காடு முதல் பி.மணிஹட்டி வரை 2 கிலோ மீட்டர் தூரம் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக இருக்கிறது. எனவே கடந்த 2 மாதமாக மீக்கேரி வழியாக பஸ்கள் சரிவர இயக்கப்படுவது இல்லை. இதனால் பள்ளி மாணவ–மாணவிகள் சரியான நேரத்துக்கு பள்ளிக்கூடத்துக்கு செல்ல முடிவது இல்லை. பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே, சாலையை சீரமைத்து மீண்டும் பஸ் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்