தேசிய ஊரக வேலை திட்டத்தில் முறைகேடு: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

கும்மிடிப்பூண்டியை அடுத்த பூவலம்பேடு ஊராட்சி தாணிப்பூண்டி கிராமத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.;

Update: 2018-06-25 19:50 GMT
திருவள்ளூர்

தேசிய ஊரக வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பூவலம்பேடு ஊராட்சி தாணிப்பூண்டி கிராமத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிதள பொறுப்பாளராக முனியம்மாள் என்பவர் தொடர்ந்து 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். அவர் சரியான முறையில் எங்களுக்கு பணி வழங்காமல் அஜாக்கிரதையாகவும், ஒரு தலைபட்சமாகவும், விதிமுறைகளுக்கு புறம்பாகவும் செயல்பட்டு வருகிறார்.

மேலும் அவர் பலவிதமான முறைகேடுகளை செய்து அரசு பணத்தை கொள்ளையடித்து வருகிறார். இதை கண்டித்து நாங்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் அதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர். எனவே தேசிய ஊரக வேலை திட்டத்தில் முறைகேடுகள் செய்து வரும் பணிதள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்