சாதி சான்றிதழ் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாணவ–மாணவிகள் தர்ணா

சாதி சான்றிதழ் வழங்கக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாணவ–மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-06-25 22:45 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், மனு கொடுப்பதற்காக மொடக்குறிச்சி தாலுகா வடுகபட்டி ஜெ.ஜெ.நகரை சேர்ந்த பூம்பூம் மாட்டுக்காரர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்தனர். அங்கு பள்ளி சீருடைகளை அணிந்து வந்த மாணவ–மாணவிகள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

இதற்கிடையே கூட்டத்தில் மனுவை பெற்றுக்கொண்டு இருந்த மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் அலுவல் ரீதியாக வெளியில் செல்ல காரில் ஏறினார். ஆனால் மாணவ–மாணவிகள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் அவர் காரில் இருந்து இறங்கி வந்தார். அப்போது அவரிடம் பூம்பூம் மாட்டுக்காரர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–

பழங்குடியின மக்களாகிய நாங்கள் ஈரோடு சந்தைப்பேட்டை, வ.உ.சி. பூங்கா அருகில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கு ஆகிய இடங்களில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு பட்டாவும், பள்ளிக்கூட குழந்தைகளுக்கு கல்வியும் வழங்கக்கோரி கோரிக்கை விடுத்தோம். கடந்த 1994–ம் ஆண்டு வடுகபட்டி கிராமம் ஜெ.ஜெ.நகரில் பட்டா வழங்கப்பட்டது. அங்கு நாங்கள் குடிசை அமைத்து வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு ரே‌ஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியன வழங்கப்பட்டன.

எங்களுடைய குழந்தைகளுக்கு பள்ளிப்படிப்பை தொடர சாதி சான்றிதழ் தேவைப்படுகிறது. எனவே ‘ஆதியன்’ பழங்குடி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். சாதி சான்றிதழ் இல்லாமல் அரசு உதவித்தொகை, வேலை வாய்ப்பு பெற முடியாத நிலை உள்ளது.

சாதி சான்றிதழ் இல்லாமல் பள்ளிக்கூடத்திற்கு சென்றும் பயனில்லை என கடந்த 1–ந் தேதியில் இருந்து மாணவ–மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்வதில்லை. இதுகுறித்து ஈரோடு ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார். பின்னர் ‘ஆதியன்’ இன சான்று வழங்க முடியாது என்று அவர் அறிக்கை கொடுத்து உள்ளார்.

தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள எங்களுடைய உறவினர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டதை போல் எங்களுக்கும் ‘ஆதியன்’ இன சான்றிதழ் வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறுகையில், ‘‘ஆதியன் இன சான்றிதழ் வழங்க முடியாது என்று ஆர்.டி.ஓ. உத்தரவிட்டு உள்ளார். அதற்கு நீங்கள் மேல்முறையீடு செய்து உள்ளீர்கள். அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் குழந்தைகளை வைத்து போராட்டம் நடத்துவது தவறான செயல். சாதி சான்றிதழ் பிரச்சினை தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. எனவே உரிய விசாரணை நடத்தப்பட்டு உங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’, என்றார். அதன்பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.

மேலும் செய்திகள்