விவசாய நிலத்தை கேட்டு தாக்கியதால் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தாய்–மகள்

விவசாய நிலத்தை கேட்டு தாக்கியதால், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தாய்–மகளால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-06-25 23:00 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மனு அளிக்க வந்த அனைவரையும் சோதனை செய்த பின்னர் தான் கலெக்டர் அலுவலகத்துக்குள் போலீசார் அனுமதித்தனர். அப்போது பெண் ஒருவர் தனது மகள் மற்றும் உறவினருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் அந்த பெண், தன்னுடைய பையில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை வெளியே எடுத்து தன் மீதும், மகள் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்ததும் ஓடிச்சென்று மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கினர்.

இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், சாணார்பட்டி அருகே உள்ள வடகாடுபட்டியை சேர்ந்த குருசாமி மனைவி கணேஷ்வரி (வயது 45) என்பது தெரிய வந்தது. மேலும் உடன் வந்தது அவருடைய மகள் சரண்யா (17) என்பதும், மற்றொருவர் குருசாமியின் அண்ணன் வெங்கடாச்சலம் என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து கணேஷ்வரி கூறும்போது, எங்களுக்கு வடகாடுபட்டியில் 8 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதன் அருகே ஒரு வழிபாட்டு தலம் உள்ளது. அந்த வழிபாட்டு தலத்துக்கு வரும் வாகனங்களை எங்கள் நிலத்தில் தான் நிறுத்துகின்றனர். இதனால் வழிபாட்டு தலத்தின் நிர்வாகிகள் சுமார் 2 ஏக்கர் நிலத்தை விலைக்கு தரும்படி கேட்டனர். ஆனால் நாங்கள் விவசாய நிலத்தை விற்க மறுத்துவிட்டோம். இதனால், வழிபாட்டு தலத்தின் நிர்வாகிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு எங்கள் வீட்டுக்கு வந்து எனது கணவர் மற்றும் மகள்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதில் காயம் அடைந்த எனது கணவர் குருசாமி, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தான் எனது மகளுடன் தீக்குளிக்க முடிவு செய்து மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்தேன் என்றார்.

இதையடுத்து மனு அளிப்பதற்காக கலெக்டரிடம் போலீசார் அவர்களை அழைத்து சென்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு கோபாலுக்கு, கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவிட்டார். அதன்படி வழிபாட்டு தலத்தின் நிர்வாகிகளான ராஜா, அருண் ஆகியோர் மீது உடனடியாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிலத்தை கேட்டு தாக்கியதால், தாய்–மகள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்