6 வழிச்சாலைக்கு கையகப்படுத்தும் நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு கேட்டு விவசாயிகள் மனு
திண்டுக்கல்–பொள்ளாச்சி இடையே அமைக்கப்பட உள்ள 6 வழிச்சாலைக்கு கையகப்படுத்தும் நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு கேட்டு கலெக்டரிடம், விவசாயிகள் மனு அளித்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். இதில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்தநிலையில் ஒட்டன்சத்திரம், தாழையூத்து, சண்முகபுரம், லட்சுமி நகர் உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர்.
அதில், திண்டுக்கல்–பொள்ளாச்சி வரை 6 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கையகப்படுத்தும் நிலத்துக்கு அரசு சார்பில் இழப்பீடு மிக குறைவாக உள்ளது. இதனால் அதிக அளவு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் அதிக அளவு நிலம் கையகப்படுத்தும் விவசாயிகளின் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
தோட்டனூத்து அருகே உள்ள அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள ஓடை பகுதியை மயானமாக பயன்படுத்தி வருகிறோம். தற்போது அதன் அருகில் பொதுக்கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் தனியார் சிலர் மயானத்துக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.
திண்டுக்கல் அருகே உள்ள டொக்குவீரன்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி என்பவர் குடும்பத்துடன் வந்து மனு அளித்தார். அதில், எங்கள் வீடு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக சிலர் கூறி தகராறு செய்தனர். இதையடுத்து வருவாய்த்துறையினர் மூலம் நிலத்தை அளவீடு செய்தபோது, அது பட்டா இடத்தில் இருப்பது தெரியவந்தது. இந்தநிலையில் எங்கள் பகுதியில் உள்ள கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. அதில் கலந்துகொள்ள விடாமல் எங்கள் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.
பா.ஜ.க.வினர் அளித்த மனுவில், சாணார்பட்டி பகுதியில் மின்சாரம் பற்றாக்குறையால் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் உள்ளது. இதனால் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்துள்ள பகுதி அருகே மின்கம்பம் ஊன்றி மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
புரட்சி பாரதம் கட்சியினர் அளித்த மனுவில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு 18 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை, இகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
நிலக்கோட்டை அருகே உள்ள ராஜதானிக்கோட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் முத்தாலம்மன், காளியம்மன், பகவதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டியபோது, சாமி சிலைகள் கிடைத்தன. இதனை சிலர் விற்பனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனியார் ஒருவர் தனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்துள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தின்போது, மாநில அளவிலான திறன் போட்டியில் 2–வது இடம் பிடித்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சசிக்குமார் என்பவரை கலெக்டர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.