நெருக்கமானவர்களுக்கு முக்கிய துறைகளில் ஆலோசகர் பொறுப்பு: முதல்-மந்திரி குமாரசாமி முடிவு

நெருக்கமானவர்களுக்கு முக்கிய துறைகளில் ஆலோசகர் பொறுப்பு வழங்க முதல்-மந்திரி குமாரசாமி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.;

Update: 2018-06-25 22:45 GMT
பெங்களூரு,

நீர்ப்பாசனம், சுகாதாரம் மற்றும் உயர்கல்வி ஆகிய முக்கியமான துறைகளில் நெருக்கமானவர்களுக்கு ஆலோசகர் பொறுப்பு வழங்க முதல்-மந்திரி குமாரசாமி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கர்நாடகத்தில் முதல்-மந்திரியாக இருப்பவர்கள் தங்களுக்கு நம்பிக்கைக்குரிய ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை முக்கிய துறைகளின் ஆலோசகர்களாக நியமிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

கடந்த 2008-ம் ஆண்டு முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா, முன்னாள் தலைமை செயலாளர் ரவீந்திராவை உள்கட்டமைப்பு துறை ஆலோசகராகவும், டாக்டர் கே.வி.ராஜூவை பொருளாதார தொடர்பான விஷயங்களுக்கான ஆலோசகராகவும் நியமித்து கொண்டார். முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கெம்பய்யாவை போலீஸ் துறை ஆலோசகராகவும் நியமித்தார்.

இதன் தொடர்ச்சியாக தற்போதைய முதல்-மந்திரி குமாரசாமியும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் மற்றும் குறிப்பிட்ட துறையில் திறமை மிகுந்து இருப்பவர்களை அந்தந்த துறைகளில் ஆலோசகராக நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, நிதி, நீர்ப்பாசனம், சுகாதாரம் மற்றும் உயர்கல்வி துறைகளின் ஆலோசகர்களாக முதல்-மந்திரி குமாரசாமிக்கு நெருக்கமானவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

நிதித்துறையை நிர்வகித்து வரும் குமாரசாமி, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவருமான எஸ்.சுப்பிரமணியாவை கர்நாடக பொருளாதாரம் மற்றும் நிதி கொள்கை தொடர்பான ஆலோசகராக நியமித்துள்ளார். இவருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இவர், பெங்களூரு மாநகராட்சி கமிஷனராக செயல்பட்டு விருப்ப ஓய்வு பெற்றதோடு, பணிக்காலத்தில் குமாரசாமியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் நீர்ப்பாசனத்துறை ஆலோசகராக கர்நாடக நீர்ப்பாசனத்துறையில் தலைமை என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்ற வெங்கடராம் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இவர் முன்னாள் பிரதமரான தேவேகவுடா, கர்நாடக முதல்-மந்திரியாக இருந்தபோது அவருடன் நெருக்கமாக இருந்ததோடு, காவிரி விவகாரத்தில் முன்னாள் நீர்ப்பாசனத்துறை மந்திரி நஞ்சேகவுடாவுடன் சேர்ந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. காவிரி விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் முதல்-மந்திரி குமாரசாமி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியபோது அவர் அளித்த கடிதத்தில் வெங்கடராமின் ஆலோசனைப்படி கர்நாடகத்தின் சார்பில் முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இதுதவிர, கர்நாடக திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ரங்கப்பாவை, உயர்கல்வித்துறை ஆலோசகராக நியமிக்கவும், சுகாதார துறைக்கு டாக்டர் சி.என்.மஞ்சுநாத்தை ஆலோசகராக நியமிக்கவும் வாய்ப்பு உள்ளது. இதில், ரங்கப்பா ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் சாமராஜா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததும், சி.என்.மஞ்சுநாத் என்பவர் குமாரசாமியின் உறவினரும் ஆவார். மேலும், சி.என்.மஞ்சுநாத் தற்போதே சுகாதாரத்துறை தொடர்பாக சில ஆலோசனைகளை குமாரசாமிக்கு வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்