தடையின்றி குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
செஞ்சி அருகே தடையின்றி குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
செஞ்சி,
செஞ்சி அருகே நல்லாண்பிள்ளைபெற்றாள் ஊராட்சிக்குட்பட்டது அம்பேத்கர் நகர், கக்கன் நகர். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் இப்பகுதியில் ஏற்பட்ட வறட்சி காரணமாக ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் குறைந்து போனதால் கடந்த ஒரு மாதமாக பொதுமக்களுக்கு போதிய குடிநீரை ஊராட்சி நிர்வாகத்தால் வழங்க முடியவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அம்பேத்கர் நகர், கக்கன்நகர் பகுதி பொதுமக்கள் தடையின்றி தங்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் போதிய குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50–க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் நேற்று காலை நல்லாண்பிள்ளைபெற்றாள் பஸ் நிறுத்தம் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு தடையில்லாமல் தினந்தோறும் குடிநீர் வழங்க வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேவராஜ், குலோத்துங்கன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூடுதலாக புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தடையின்றி குடிநீர் வழங்கப்படும் என்று போராட்டக்காரர்களிடம் உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குரவத்து பாதிக்கப்பட்டது.