பேரம்பாக்கம் அருகே மின்கம்பத்தில் மோதி லாரி தீப்பிடித்தது

பூந்தமல்லியில் இருந்து அரக்கோணம் நோக்கி வேகமாக சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதி மின்கம்பத்தில் மோதியது.லாரி மீது மின்கம்பி விழுந்ததால் லாரியின் முன்பக்கம் தீப்பிடித்து எரிந்தது.

Update: 2018-06-25 19:13 GMT

திருவள்ளூர்

பேரம்பாக்கம் அருகே குடிசை மற்றும் மின்கம்பத்தில் மோதி லாரி தீப்பிடித்தது.

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள இருளஞ்சேரியை சேர்ந்தவர் குமார் (வயது34). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தன்னுடைய மனைவி பூவழகி, மகள்கள் நிஷாந்தினி (12), சிவாந்தினி (10), மகன் கிரண்குமார் (8), தந்தை டேவிட் ஆகியோருடன் தூங்கி கொண்டிருந்தார்.

நள்ளிரவில் பூந்தமல்லியில் இருந்து அரக்கோணம் நோக்கி வேகமாக சென்ற லாரி ஒன்று குமார் வீட்டின் குடிசையின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பின்னர் அவரது குடிசையின் முன்புறத்தில் மோதி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. அப்போது லாரியின் அடியில் மோட்டார் சைக்கிள் சிக்கி சேதம் அடைந்தது.

லாரி மின்கம்பத்தில் மோதிய வேகத்தில் அந்த மின்கம்பம் முற்றிலுமாக சேதம் அடைந்தது. லாரி மீது மின்கம்பி விழுந்ததால் லாரியின் முன்பக்கம் தீப்பிடித்து எரிந்தது. அப்போது லாரியில் இருந்த டிரைவர் இறங்கி தப்பியோடிவிட்டார். லாரியின் அடியில் சிக்கிய மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி எரிந்தது.

இது குறித்து உடனடியாக பேரம்பாக்கம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் ½ மணி நேரத்திற்கு மேல் போராடி லாரியின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். இதனால் அந்த லாரி முன்பக்கம் மட்டும் எரிந்தது. இது குறித்து குமார் மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவர் யார்? என விசாரித்து வருகின்றனர்.

இந்த விபத்தில் தூங்கி கொண்டிருந்த குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் காயமின்றி தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்