கட்டணம் செலுத்த முடியாவிட்டால் முறுக்கு போட செல்லுங்கள் தலைமை ஆசிரியர் துன்புறுத்துவதாக கலெக்டரிடம் மாணவர்கள் புகார்

கட்டணம் செலுத்த முடியாவிட்டால் முறுக்கு போட செல்லுங்கள் என்று தலைமை ஆசிரியர் துன்புறுத்துவதாக மாணவர்கள் கலெக்டரிடம் புகார் செய்தனர்.

Update: 2018-06-25 22:45 GMT

மதுரை,

உசிலம்பட்டியில் உள்ள எஸ்.டி.ஏ. பள்ளி மாணவர்கள் சுமார் 15 பேர் நேற்று பள்ளி சீருடை அணிந்தபடி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு நடந்த குறைத்தீர்க்கும் முகாமில் அவர்கள் கலெக்டர் வீரராகவராவை சந்தித்து பள்ளி குறித்து சில புகார்களை கூறினர். பின்னர் கலெக்டரிடம், அவர்கள் ஒரு புகார் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

நாங்கள் உசிலம்பட்டியில் உள்ள எஸ்.டி.ஏ. பள்ளியில் படித்து வருகிறோம். மத்திய அரசின் இலவச கல்வி சட்டத்தின் கீழ் அந்த பள்ளியில் கடந்த 2011–ம் ஆண்டு சேர்ந்தோம். தொடர்ந்து அந்த பள்ளியில் படித்து வந்தோம்.

தற்போது புதிய முதல்வர் பொறுப்பேற்றுள்ளார். அவர் மத்திய அரசிடம் இருந்து உங்களுக்கான கட்டணம் வரவில்லை. அதனால் இனி பள்ளிக்கு வர வேண்டாம் என்று கூறினார். ஆனால் தொடர்ந்து பள்ளிக்கு சென்றோம். அவர் எங்களை அவமானப்படுத்தும் விதமாக வெயிலில் வெளியே நிற்க வைத்தார். மேலும் பணம் கட்ட முடியாவிட்டால் முறுக்கு போட செல்லுங்கள், இல்லையென்றால் மாடு மேய்க்க செல்லுங்கள் என்று துன்புறுத்துகிறார். அவரின் தொடர் துன்புறுத்தலால், கல்வி கட்டணம் கட்டுகிறோம் என்று கூட சொல்லி விட்டோம். ஆனால் அவர் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு அதிகம் கேட்கிறார்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர், உடனடியாக இது குறித்து விசாரணை நடத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மனு கொடுக்க வந்த மாணவர்களுக்கு கலெக்டர் மோர் வாங்கிக் கொடுத்து பத்திரமாக ஊருக்கு செல்லும்படி அனுப்பி வைத்தார்.

மேலும் செய்திகள்