நாட்டரசன்கோட்டை–காளையார்கோவில் இடையே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும், கலெக்டரிடம் மனு

நாட்டரசன்கோட்டை–காளையார்கோவில் இடையே கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனுகொடுத்தனர்.

Update: 2018-06-25 22:00 GMT

சிவகங்கை

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வருவாய் அலுவலர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் உதவித்தொகை கோருதல், வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை, உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், இலவச தையல் எந்திரம் வழங்க கேட்டல், ஆக்கிரமிப்பு அகற்ற கேட்டல், மின் இணைப்பு உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பின்னர் இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் நாட்டரசன்கோட்டையை சேர்ந்த செல்லம் என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது:–

நாட்டரசன்கோட்டையில் பிரசித்தி பெற்ற கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் உள்ளது. மேலும் இந்த ஊரை தமிழக அரசு சுற்றுலா தலமாகவும் அறிவித்துள்ளது. தற்போது நாட்டரசன்கோட்டை, காளையார்கோவில் தாலுகாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தேவைகளுக்காக இப்பகுதி மக்கள் காளையார்கோவில் தாலுகா அலுவலகம் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. ஆனால் நாட்டரசன்கோட்டையில் இருந்து காளையார்கோவில் சென்று வர போதுமான பஸ்வசதி கிடையாது. ஏற்கனவே நாட்டரசன்கோட்டைக்கு வந்து சென்ற பஸ்களும் தற்போது இயக்கப்படுவதில்லை. எனவே நாட்டரசன்கோட்டையில இருந்து காளையார்கோவிலுக்கு சென்று வர வசதியாக கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். மேலும் மதுரை–தொண்டி செல்லும் பஸ்கள், நாட்டரசன்கோட்டை ஊருக்குள் சென்று வரும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்