மது குடித்து 4 பேர் இறந்ததாக கூறப்பட்டதில் திடீர் திருப்பம்: உணவில் வி‌ஷம் கலந்து கொலை செய்யப்பட்டது அம்பலம், பெண் கைது

சிவகாசியில் மது குடித்துவிட்டு 4 பேர் இறந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக அவர்கள் வி‌ஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் இறந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-06-25 23:15 GMT

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்று முன்தினம் மது அருந்திய 4 வாலிபர்கள் அடுத்தடுத்து வாந்தி எடுத்து இறந்தார்கள். மேலும் சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் விசாரணை நடத்த 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீசாரின் தீவிர விசாரணையில், 4 பேரும் வி‌ஷம் கலந்த கோழிக்கறியை சாப்பிட்டதால் இறந்தது தெரியவந்தது.

பெண் ஒருவர் தனது தம்பியை தீர்த்துக்கட்ட தயாரித்த வி‌ஷம் கலந்த உணவு 4 பேரை பலி கொண்டது அம்பலமானது. இது பற்றிய விவரம் வருமாறு:–

சிவகாசியை சேர்ந்த தர்மராஜ் என்பவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி வாணிக்கு அய்யப்பன் (வயது 22) என்ற மகன் உள்பட 5 பிள்ளைகள். 2–வது மனைவி இந்திராணிக்கு வள்ளி (33), முருகன் (22) என்ற 2 பிள்ளைகள். இந்திராணி முத்தாட்சி மடத்தில் வசித்து வருகிறார்.

வள்ளிக்கும், கோவையை சேர்ந்த நேரு கண்ணன் என்பவருக்கும் 2008–ல் திருமணம் நடைபெற்றது. பின்னர் ஏற்பட்ட தகராறில் கணவரை பிரிந்த வள்ளி தாய்வீட்டுக்கு வந்து அந்த பகுதியில் உள்ள ஒரு அச்சகத்தில் வேலை செய்து வருகிறார். முருகனுக்கு மது, கஞ்சா போன்ற பல தீயபழக்கங்கள் உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை முருகன், அவருடைய சகோதரன் அய்யப்பன் (22), நண்பர்கள் கணேசன் (21), முகமது இப்ராகிம் (22), கவுதம் (15), ஜனார்த்தனன் என்கிற சாஸ்தா சரவணன் (13), ஹரிஹரன் என்கிற அந்தோணி (22) ஆகியோருடன் முத்தாட்சி மடத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த சாப்பாட்டை கோழிக்கறி குழம்பு ஊற்றி சாப்பிட்டனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து வெளியே சென்றுவிட்டனர். முன்னதாக அவர்கள் மதுவும் அருந்தியுள்ளனர்.

சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த முருகன் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அவருடன் கோழிக்கறி சாப்பிட்ட மற்றவர்களும் வாந்தி–மயக்கம் ஏற்பட்டு விழுந்தனர். உடனே உறவினர்கள் அவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவந்தனர். அங்கு கணேசன், கவுதம், முகமது இப்ராகிம் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். வீட்டில் மயங்கி கிடந்த முருகனும் இறந்தது தெரியவந்தது. மற்ற 4 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கெட்டுப்போன மது அருந்திய 4 பேர் இறந்ததாக தகவல் பரவியதால் குறிப்பிட்ட சில மதுக்கடையில் மது அருந்திய 4 பேர் சந்தேகத்தில் சிவகாசி ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். இறந்துபோன 4 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், அவர்களின் வயிற்றில் குருணை மருந்தும் (வி‌ஷம்), மதுவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் அந்தோணி போலீசாரிடம் சில தகவல்களை கூறினார். அதன் அடிப்படையில் போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தினர். போலீசார் பூட்டியிருந்த முருகனின் வீட்டை திறந்து பார்த்தபோது வி‌ஷம் கலந்த உணவு அங்கு மீதம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக முருகனின் தாயார் இந்திராணி, அக்கா வள்ளி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது தம்பி முருகன் தனக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததால் அவரை கொல்ல உணவில் வி‌ஷம் கலந்து வைத்ததை வள்ளி ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து போலீசார் வள்ளியை கைது செய்தனர். விசாரணையின்போது வள்ளி கூறியதாவது:–

கணவனை பிரிந்து தாயுடன் வசித்துவந்தேன். எனது தம்பிக்கு கடந்த 2 ஆண்டுகளாக தீயபழக்கங்கள் அதிகரித்ததால் எல்லை மீறி நடக்க ஆரம்பித்தான். சில நாட்களாக என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தத் தொடங்கினான். இதை நான் யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்தேன். எனது தாயாரிடம் கூட சொல்லவில்லை.

இதனால் எனது தம்பியை வி‌ஷம் வைத்து கொல்ல திட்டம் தீட்டினேன். ஞாயிற்றுக்கிழமை காலையில் உணவு சமைக்கும்போது கோழிக் குழம்பில் குருணை மருந்தை கலந்து வைத்துவிட்டு இருக்கன்குடி கோவிலுக்கு தாயுடன் சென்றுவிட்டேன். அந்த உணவை சாப்பிட்டு அவன் இறந்துவிட்டால், தற்கொலை செய்துகொண்டான் என்று கூறி தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் அவனுடன் மேலும் 3 பேர் இறந்ததால் போலீசாரின் விசாரணை கடுமையாக இருந்தது. இதில் நான் சிக்கிக்கொண்டேன்.

இவ்வாறு வள்ளி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் வள்ளிக்கு வேறு யாராவது உதவியாக இருந்தனரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வள்ளி வேலை செய்துவந்த அச்சகத்தின் உரிமையாளர் செல்வம் என்பவருக்கு இதில் தொடர்பு உள்ளதா என்று போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். வள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிவகாசி டவுன் போலீசார் இதனை கொலை வழக்காக மாற்றினர். போலீசார் திறமையாக துப்பு துலக்கியதற்கு சூப்பிரண்டு ராஜராஜன் பாராட்டு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்