சேலத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ-மாணவிகள் யோகா பயிற்சி

சேலத்தில் உள்ள பள்ளிகளில் உலக யோகா தினத்தையொட்டி மாணவ-மாணவிகள் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.;

Update: 2018-06-24 23:27 GMT
சேலம்,

சேலத்தை அடுத்த நெய்க்காரப்பட்டி ஸ்ரீ வித்ய பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் யோகா பயிற்சி செய்தனர். யோகா பயிற்சியின் மகத்துவம் குறித்தும், யோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் குறித்தும் பள்ளியின் தாளாளர் வசந்தா வானமாமலை பேசினார். இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

சேலம் சோனா கல்வி குழுமம் சார்பில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு சோனா கல்வி குழும முதல்வர்கள் கார்த்திகேயன், செந்தில்குமார், காதர்நவாஷ் ஆகியோர் தலைமை தாங்கி யோகா கல்வி, மன அழுத்தம்,மேலாண்மை மற்றும் மன அமைதி பற்றி விளக்கம் அளித்தனர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு யோகா சங்க பொது செயலாளர் யோகிராஜ்ராமலிங்கம் கலந்து கொண்டு யோகாவின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தார். இதில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் என 2 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.

இதே போன்று சேலம் உடையாப்பட்டி பவர் ஹவுஸ் அருகில் உள்ள கைலாஷ் மான்சரோவர் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் உலக யோகா தின விழா நடைபெற்றது. இதில் எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து உலக யோகா தின விழா என்ற தலைப்பில் ரங்கோலி வரைந்தனர். இதில் கல்வி குழும தலைவர் கைலாசம், செயலாளர் ராஜவிநாயகம், தாளாளர் செந்தில்குமார், முதல்வர் வேங்கடஅழகிரி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதே போன்று சேலம் கோல்டன் ஸ்பார்க் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பள்ளி முதல்வர் ராதிகா தலைமை தாங்கி யோகா குறித்து பேசினார். இதில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு யோகா செய்தனர். முடிவில் யோகா ஆசிரியை பிரபாதேவி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாட்டை உடற்கல்வி இயக்குனர் சரவணன் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்