கடந்த பட்ஜெட்டில் சித்தராமையா அறிவித்த திட்டங்கள் மாற்றப்படாது துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் பேட்டி

கடந்த பட்ஜெட்டில் சித்தராமையா அறிவித்த திட்டங்கள் மாற்றப்படாது துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் தெரிவித்தார்.;

Update: 2018-06-24 22:15 GMT

மங்களூரு, 

கடந்த பட்ஜெட்டில் சித்தராமையா அறிவித்த திட்டங்கள் மாற்றப்படாது துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் தெரிவித்தார்.

சித்தராமையா–பரமேஸ்வர் சந்திப்பு

கர்நாடக துணை முதல்–மந்திரியும், மாநில காங்கிரஸ் தலைவருமான பரமேஸ்வர் நேற்று பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் மங்களூருவுக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து தனியார் கார் மூலம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்த பரமேஸ்வர், உஜ்ரியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வரும் சித்தராமையாவை சந்தித்து பேசினார்.

சித்தராமையாவும், பரமேஸ்வரும் தனியாக ஆலோசனை நடத்தினார்கள். அப்போது அவர்கள், கர்நாடக அரசியல் நிலவரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்புக்கு பின்னர், துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

சித்தராமையா எதிர்க்கவில்லை

தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக தான் இங்கு வந்தேன். மஞ்சுநாதரை தரிசனம் செய்துவிட்டேன். உஜ்ரியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையாவை சந்தித்து பேசினேன். அவருடைய உடல் நலம் குறித்து விசாரித்தேன். இந்த சந்திப்பில் வேறு எந்த சிறப்பும் கிடையாது. கடன் தள்ளுபடி வி‌ஷயத்தில் சித்தராமையா எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

கூட்டணி ஆட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவரே அவர் தான். இதனால் நாங்கள் யாரும் தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்கமாட்டோம். கடந்த முறை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது சித்தராமையா, ரூ.8,125 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தார். இந்த முறை குமாரசாமி, கர்நாடகத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்வது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.

கடந்த பட்ஜெட்டில்...

கர்நாடக மக்களின் நலனுக்காக காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சியினரும் பேசி முடிவு எடுப்போம். கர்நாடக காங்கிரஸ் தலைவர் யார் என்பதை தக்க நேரத்தில் மேலிடம் அறிவிக்கும். புதிய பட்ஜெட்டை பொறுத்தவரை சித்தராமையாவுக்கு எந்த அதிருப்தியும் இல்லை. அந்த பட்ஜெட்டில் சித்தராமையா அறிவித்த திட்டங்களை மாற்ற போவதில்லை. கடந்த பட்ஜெட்டில் சித்தராமையா அறிவித்த திட்டங்கள் மாற்றப்படாது. சித்தராமையாவால் அறிவித்த திட்டங்கள் அப்படியே தொடரும்.

வாரிய தலைவர்கள் நியமன விவகாரத்தில் பெயர் பட்டியல் டெல்லியில் உள்ளது. இதுதொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. மந்திரி பதவி கிடைக்காதவர்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கப்படும்.

மனகசப்பு இல்லை

கூட்டணி ஆட்சி குறித்து காங்கிரசில் யாருக்கும் மனகசப்பு இல்லை. சித்தராமையாவுக்கு மனகசப்பு இருப்பதாக கூறுகிறார்கள். இப்போது தான் அவரிடம் பேசினேன். அவ்வாறு சித்தராமையாவுக்கு மனகசப்பு இருந்திருந்தால் என்னிடம் கூறியிருப்பார். விவசாய கடன் தள்ளுபடியை காங்கிரஸ் எதிர்க்கவில்லை. 2 கட்சிகளை சேர்ந்தவர்களும் உட்கார்ந்து பேசி தான் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்