பெலகாவி அருகே சோகம் கார்–மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர்கள் 3 பேர் சாவு இன்னொரு விபத்தில் தாய்–மகன் பலி
பெலகாவி அருகே கார்–மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
பெங்களூரு,
பெலகாவி அருகே கார்–மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கல்லூரி மாணவர்கள் 3 பேர் சாவுபெலகாவி மாவட்டம் தேசூர் கிராமத்தின் அருகே கானாப்புரா ரோட்டில் நேற்று காலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார், மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில், மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தனர்.
பலியானவர்கள் பெலகாவி டவுன் கூனவாலிஹள்ளியை சேர்ந்த அதர்வா ஜாதவ்(வயது 16), அனசூரகரேஹள்ளியை சேர்ந்த அமன் ஆனந்த் கபிலேஷ்வரி(17), முஜாவர்ஹள்ளியை சேர்ந்த சுனில்(17) ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 3 பேரும் வெவ்வேறு கல்லூரிகளில் டிப்ளமோ படிப்பு படித்து வந்ததும் தெரியவந்தது. இவர்கள் கானாப்புரா அருகே கனேபைல் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி இறந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பெலகாவி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாய்–மகன் சாவுஇதேபோல் கொப்பல் மாவட்டம் ஜப்பலகுட்டா அருகே நேற்று சென்று கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சரிந்து விழுந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அல்னாநகரை சேர்ந்த ரமேஷ்(28), அவருடைய தாய் ரத்னம்மா(50) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி முனிராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.