சென்னையில் ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் பேரணி

சென்னையில் ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் பேரணி நடத்தினர். இளம் வயதினர் அதிகளவில் பங்கேற்றனர்.

Update: 2018-06-24 21:14 GMT
சென்னை,

ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் ‘வானவில் கூட்டணி’ என்ற பெயரில் அமைப்பு நடத்தி வருகின்றனர். இவர்கள் தங்களுடைய உரிமைகளை வலியுறுத்தி சென்னையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று ‘வானவில் சுயமரியாதை’ என்ற தலைப்பில் பேரணி நடத்துவது வழக்கம்.

அதன்படி அவர்களுடைய 10-ம் ஆண்டு பேரணி சென்னையில் நேற்று நடந்தது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தொடங்கிய பேரணி சிந்தாதிரிப்பேட்டை லேங்க்ஸ் தோட்ட சாலை சந்திப்பில் நிறைவடைந்தது.

சென்னை மட்டுமின்றி, பிற மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த ஓரினச்சேர்க்கையாளர்கள் பலரும் பேரணியில் பங்கேற்றனர். குறிப்பாக இந்த ஆண்டு இளம்பெண்கள் அதிகளவில் வந்திருந்தனர். ஏராளமான திருநங்கைகளும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

‘மேள-தாளம்’ முழங்க, ‘ஆடி-பாடி’ அனைவரும் உற்சாகத்தில் திளைத்தனர். ‘எங்கள் பாலினம் எங்கள் உரிமை’, ‘எனது உடல் எனது உரிமை’ போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர்.

ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் பலர் கையில் ஏந்தி இருந்தனர். பாதுகாப்புக்காக ஏராளமான போலீசாரும் உடன் சென்றனர்.

பேரணியில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி துண்டுபிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. அதில் உள்ள சில கோரிக்கைகள் வருமாறு:-

* ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி அன்று வழங்கிய தீர்ப்பை மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

* மத்திய அரசின் மாற்று பாலினத்தோர் உரிமை மசோதாவை (2016) நாங்கள் எதிர்க்கிறோம்.

* முறையற்ற மின்சிகிச்சை, கட்டாய திருமணம் போன்றவற்றின் மூலம் ஒருவரின் பாலின, பாலின ஈர்ப்பு அடையாளத்தை கட்டாயப்படுத்தி மாற்ற முயற்சி செய்யும் சுகாதார நிபுணர்கள், மத குழுக்கள் மற்றும் போலி டாக்டர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

* பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகளுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மேற்கண்டவாறு தகவல்கள் இடம் பெற்றிருந்தன.

மேலும் செய்திகள்