பட்டதாரி வாலிபரிடம் ஆன்லைனில் ரூ.10 லட்சம் மோசடி 2 பேர் கைது

பட்டதாரி வாலிபரிடம் ஆன்லைனில் ரூ.10 லட்சம் மோசடி செய்த, 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம், செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-06-24 23:00 GMT
தர்மபுரி,

தர்மபுரி காந்திநகரை சேர்ந்தவர் நவாஸ்பாஷா (24). பி.காம் பட்டதாரியான இவர் வேலை தேடி வருகிறார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 3-ந் தேதி, இவரது செல்போனில் தொடர்பு கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் மாதேபள்ளியை சேர்ந்த சாகர் (23), தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்த திருமுருகன் (25) ஆகியோர், தாங்கள் ஆன்லைன் பங்குசந்தையில் முதலீடு செய்கிறோம். தாங்கள் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளனர். இதை நம்பிய நவாஸ்பாஷா முதல் தவணையாக, ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார்.

மேலும் ஆசைவார்த்தை கூறி தொடர்ந்து, 3 தவணையாக, ரூ.9 லட்சம் என மொத்தம், ரூ.10 லட்சம் வங்கி கணக்கு மூலம் பெற்றுள்ளனர். ஆனால் சில மாதங்கள் கடந்த நிலையில் முதலீட்டுக்கான எவ்வித பலன்களும் கிடைக்கவில்லை. சந்தேகம் அடைந்த நவாஸ்பாஷா இது தொடர்பாக விசாரித்த போது தான் ஏமாற்றப்பட்டதை அறிந்துள்ளார்.

இதையடுத்து அவர் தர்மபுரி டவுன் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் விசாரணை மேற்கொண்டார். இதில் சாகர், திருமுருகன் ஆகியோரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் நவாஸ்பாஷாவிடம் இருந்து ரூ.10 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து தர்மபுரி டவுன் போலீசார் தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஏமாற்றுதல் பிரிவின் கீழ் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மற்றும் 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்