தேவாலயம், வீடுகளில் திருடிய நாகர்கோவில் வாலிபர் கைது

தேவாலயம், வீடுகளில் திருடிய நாகர்கோவில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-06-24 22:45 GMT
பத்மநாபபுரம்,

கேரள மாநில எல்லை பகுதியான நெய்யாற்றின்கரை சுற்றுவட்டார பகுதியில் உள்ள வீடுகளில் கடந்த சில நாட்களாக இரும்பு பைப்புடன் கூடிய நல்லிகள் தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து பாறசாலை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெய்யாற்றின்கரை பட்டாங்கல்லு பகுதியில் ஒரு தேவாலயத்தின் முன்பு இருந்த இரும்பு பைப்புகள் திருட்டு போனது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தேவாலய பணியாளர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை சோதனை செய்தனர்.

அதில் மர்ம ஆசாமி நள்ளிரவில் ஆலய வளாகத்தில் உள்ள பைப்புகளை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. உடனே இதுபற்றி பாறசாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த கேமரா பதிவுகளை கொண்டு, மர்ம ஆசாமியை தேடிவந்தனர்.

இந்தநிலையில் திருட்டு சம்பவத்தில் தேடப்பட்ட ஆசாமி, பாறசாலை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் அந்த ஆசாமி அங்கிருந்து பஸ்சில் ஏறி தப்பிச்சென்றார். உடனே போலீசார் அந்த பஸ்சை பின்தொடர்ந்து சென்று உதயம்குளம்கரை பகுதியில் வைத்து வழிமறித்தனர். போலீசார் வந்ததை கண்ட ஆசாமி பஸ்சில் இருந்து கீழே இறங்கி ஓட முயன்றார். அப்பகுதி ஆட்டோ டிரைவர்கள் உதவியுடன் போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர், அவரை போலீஸ்நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர், நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் மேலத்தெருவை சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 27) என்பதும், நெய்யாற்றின்கரை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தேவாலயம் மற்றும் வீடுகள் உள்ளிட்ட 10 இடங்களில் இரும்பு பைப்புடன் கூடிய நல்லிகளை திருடி குமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள ஒரு கடையில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்