திண்டுக்கல்லில் அதிகாரிகள் திடீர் சோதனை: ரசாயன கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 1 டன் மாம்பழங்கள் பறிமுதல்

திண்டுக்கல்லில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், ரசாயன கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 1 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2018-06-24 22:15 GMT

திண்டுக்கல்,

தமிழகத்தில் தற்போது மாம்பழ சீசன் நடந்து வருகிறது. இதன்காரணமாக அனைத்து பழக்கடைகளிலும் மாம்பழங்கள் குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில், சில கடைகளில் ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செல்வம், சரண்யா மற்றும் சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட மாநகராட்சி ஊழியர்கள் திண்டுக்கல்லில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ஸ்பென்சனர் காம்பவுண்டு பகுதியில் உள்ள ஒரு குடோனில் ரசாயன கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த 600 கிலோ மாம்பழங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர், அவற்றை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை லாரியில் ஏற்றினர். இதேபோல அந்த பகுதியில் உள்ள மேலும் 3 குடோன்களிலும் ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த 250 கிலோ மாம்பழங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், திருவள்ளுவர் சாலையில் உள்ள 3 கடைகளிலும் ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 150 கிலோ மாம்பழங்கள் கைப்பற்றப்பட்டன.

இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்களை சாப்பிடுவதால் நெஞ்சு எரிச்சல், வயிற்றுப்போக்கு ஏற்படும். தற்போது, கைப்பற்றப்பட்ட 1 டன் மாம்பழங்கள் மீதும் பினாயில் ஊற்றப்பட்டுள்ளது. இவற்றை முருகபவனத்தில் உள்ள குப்பைக்கிடங்கில் குழிதோண்டி புதைத்து விடுவோம். இதேபோல தொடர்ந்து ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை விற்பனை செய்தால் கடையை மூடி சீல் வைப்போம் என்றனர்.

மேலும் செய்திகள்