ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதை கண்டித்து சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

திருமருகல் அருகே ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-06-24 23:00 GMT
திட்டச்சேரி,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் முடிகொண்டான் ஆறு, அரசலாறு, திருமலைராஜன் ஆறு ஆகிய ஆறுகள் உள்ளன. இந்த ஆறுகளில் சிலர் அனுமதியின்றி மணல் திருடி செல்வதாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பொதுமக்கள் புகார்கள் அளித்து வருகின்றனர். அதைதொடர்ந்து வருவாய் துறை, கனிமவளத்துறை, காவல் துறை சார்பில் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதிகாரிகளையும் மீறி பல்வேறு இடங்களில் திருட்டு தனமாக மணல் அள்ளப்படுவதால் பல்வேறு இடங்களில் பொதுமக்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் சேஷமூலை பகுதியில் தொடர்ந்து திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த மே மாதம் 25-ந்தேதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, உதவி கலெக்டர், தாசில்தார் ஆகியோரிடம் மனு அளித்துள்ளனர். இதையடுத்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் சேஷமூலை பகுதியில் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அம்பேத்கர் நகர் பகுதி மக்களின் மயானம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் அனுமதியின்றி மணல் அள்ளியதை கண்டித்து நேற்று அம்பேத்கர்நகர் பொதுமக்கள் சேஷமூலை, பூந்தோட்டம் - காரைக்கால் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன், திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்திரசரஸ்வதி, கிராம நிர்வாக அலுவலர் சதீஸ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தொடர்ந்து திருட்டுத்தனமாக மணல் அள்ளுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் அள்ளுபவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அனுமதியின்றி மணல் அள்ளுபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்