கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கட்டுப்படவேண்டும், தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. பேட்டி

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

Update: 2018-06-24 22:15 GMT

கம்பம்,

தேனி மாவட்டம், கம்பத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. நேற்று வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தேனி மாவட்டத்தில் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதால், சுற்றுச்சூழல், விவசாயம் பாதிக்கும். எனவே அந்த திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிடவேண்டும். திண்டுக்கல்–குமுளி அகல ரெயில்பாதை திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் உள்ளது. அதனை விரைவாக செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழகத்தில் கவர்னர் ஆய்வுகள் மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது. அதை கண்டித்து கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டிய தி.மு.க.வினரை கைது செய்வது தேவையற்றது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்.

விமானநிலையங்கள், சாலைகள் போன்றவை நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானவை. எனவே எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தும் பசுமை சாலை திட்டத்தை வரவேற்கிறேன். அதே நேரத்தில் விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்கிய பின்தான், அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கட்டுப்பட்டு கர்நாடக அரசு செயல்படவேண்டும். 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் விவகாரத்தில் நீதிமன்றமும், சபாநாயகரும் ஒரு மிகப்பெரிய சக்தியாக கவனிக்கப்படுகிறார்கள். இதில் வானளாவிய அதிகாரம் சபாநாயகருக்கு மட்டுமே உள்ளது என்று ஒரு தரப்பும், சட்டத்திற்கு சபாநாயகர் கட்டுப்பட்டுதான் ஆகவேண்டும் என்று ஒரு தரப்பும் வாதித்துக் கொண்டிருக்கும் வேளையில், பொதுமக்களிடமும், சட்டமன்ற உறுப்பினர்களிடமும் இந்த வி‌ஷயத்தில் ஒரு குழப்பமாகவே உள்ளது. காலம் விரைவில் சில முடிவுகளை வழங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்