சின்னமனூர் அருகே மலைப்பாதையில் சுற்றுலா வேன் பாறையில் மோதி 18 பேர் படுகாயம்

சின்னமனூர் அருகே மலைப்பாதையில், சுற்றுலா வேன் பாறையில் மோதி 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-06-24 21:45 GMT

சின்னமனூர்,

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் ஒரு வேனில் 18 பேர் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள மேகமலைக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் மேகமலையை சுற்றி பார்த்து விட்டு, நாமக்கல்லுக்கு நேற்று புறப்பட்டனர். வேனை ஈரோட்டை சேர்ந்த முருகேஷ் (வயது 40) என்பவர் ஓட்டினார்.

மலைப்பாதையில் மந்திபாறை என்னுமிடத்தில் சாலையோர வளைவில் வேன் திரும்பியது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் தாறுமாறாக ஓடியது. வேனில் இருந்தவர்கள் அபயக்குரல் எழுப்பினர். மலைப்பாதையில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விடாமல் இருக்க டிரைவர் வேனை திருப்பினார். இதன்காரணமாக அந்த வேன் சாலையோரத்தில் தடுப்புச்சுவர் அருகே உள்ள பாறை மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த புதுபாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (33), நாமக்கல்லை சேர்ந்த சுந்தரராஜன் (47), பரமத்திவேலூரை சேர்ந்த மோகன்ராஜ் (30), சண்முகம் (40), மற்றொரு சுந்தரராஜன் உள்பட 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து சின்னமனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேகமலையில், கடந்த சில தினங்களுக்குள் மந்திபாறை பகுதியில் 4 விபத்துகள் நடந்துள்ளன. குறிப்பாக வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களே விபத்தில் சிக்குகின்றன. இதனை கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க மலைப்பாதையில் அடிக்கடி விபத்து நடக்கும் இடத்தை ஆய்வு செய்து, குறுகலான பகுதியை அகலப்படுத்த வேண்டும். அதுவரை தற்காலிகமாக சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கூடாது. மலைப்பாதையில் சாலையோர தடுப்புச்சுவர்கள் அமைத்து, விபத்து எச்சரிக்கை பலகை வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மேகமலை பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்